ஐஆர்சிடிசி சார்பில் 2 வாரங்களில் ரயில் நிலையங்களிலேயே உணவு தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தற்போது ரயில்களில் இருக்கும் சமையலறைப் பெட்டி கள் நீக்கப்படுகின்றன.
இந்திய ரயில்வேயில் இயக்கப்படும் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில்களில் தினமும் சுமார் 2 கோடியே 30 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். ரயிலில் உணவு தயாரித்து வழங்குவதில் பல்வேறு குறைபாடுகள் நிலவியதால் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு ஐஆர்சிடிசி இந்த பணியில் இருந்து விடுவிக்கப்பட்டது. இப்பணி தனியார்வசம் ஒப்படைக்கப் பட்டது. இதன்பிறகும் பயணிக ளுக்கு தரமான உணவுப் பொருட் கள் கிடைக்கவில்லை. சில ரயில்களில் அதிக விலைக்கு உணவுப்பொருட்கள் விற்கப்படுவ தாகவும் புகார் எழுந்தது.
இந்நிலையில் ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, புதிய உணவுக் கொள்கையை சமீபத்தில் அறிமுகப்படுத்தினார். இதன்படி ரயில் பயணிகளுக்கான உணவு தயாரிப்புப் பணிகளை ஐஆர்சிடிசியும், உணவு விநி யோகப் பணிகளைத் தனியார் நிறுவனங்களும் மேற்கொள்ள வுள்ளன.
ரயில் நிலையங்களிலேயே உணவு தயாரிக்கப்படவுள்ளதால் பயணிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, விரைவு ரயில்களில் இருக்கும் சமையலறைப் பெட்டி கள் (பேன்ட்ரி கார்) படிப்படியாக நீக்கப்படவுள்ளன.
இது தொடர்பாக ஐஆர்சிடிசி யின் உயர் அதிகாரிகள் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
ரயில் பயணிகளுக்கு தேவை யான உணவுகளை ரயில் நிலை யங்களில் தயாரித்து நியாயமான விலையில் வழங்கவுள்ளோம். இதன்படி பயணிகளுக்கு இட்லி, பொங்கல், வடை, சாப்பாடு, பரோட்டா, சப்பாத்தி, முட்டை, பிரட் உள்ளிட்டவை கிடைக்கும். முதல்கட்டமாக ஜி.டி. எக்ஸ்பிரஸ், தமிழ்நாடு எக்ஸ்பிரஸ், சதாப்தி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 15 விரைவு ரயில்களில் இந்த சேவை 2 வாரங் களில் தொடங்கவுள்ளது. இத்திட் டம் படிப்படியாக மற்ற விரைவு ரயில்களுக்கும் விரிவுபடுத்தப் படும். இதனால், ஆயிரக்கணக் கானோர் வேலைவாய்ப்பு பெற முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
சமையலறைப் பெட்டி நீக்கம்
ரயில்களில் 45 ஆண்டுகளாக இருக்கும் சமையலறைப் பெட்டி நீக்கப்படுவது பற்றி ரயில்வே அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘ஒரு சில விரைவு ரயில்களில் உள்ள சமையலறைப் பெட்டிகளில் மின்சார அடுப்புகள் மூலம் உணவு தயாரிக்கப்படுகிறது. ஆனால், பெரும்பாலான ரயில்களில் இருக் கும் சமையலறைப் பெட்டிகளில் உணவு தயாரிக்க காஸ் பயன் படுத்தப்படுகிறது. இதனால், ரயில்களில் தீ விபத்து ஏற்படக் கூடிய ஆபத்து உள்ளது. எனவே, பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, ரயில்களில் இணைக்கப்பட்டுள்ள சமைய லறைப் பெட்டிகள் படிப்படியாக நீக்கப்படும்’’ என்றார்.