தமிழகம்

பேரறிவாளனுக்கு பரோல் கிடைக்குமா? - பரிசீலித்து வருவதாக முதல்வர் அறிவிப்பு

செய்திப்பிரிவு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண் டனை பெற்றுள்ள பேரறிவாளனுக்கு பரோல் வழங்குவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக முதல்வர் கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று திமுக உறுப்பினர் ஜெ.அன்பழகன், மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி, கொங்குநாடு இளைஞர் பேரவை தலைவர் உ.தனியரசு, முக்குலத் தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் ஆகியோர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து முதல்வர் பேசியதாவது:

பேரறிவாளனை பரோலில் விட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், துணைத் தலைவர் துரைமுருகன், சட்டப் பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், அமைச் சர்கள் சிலர், ஆளுங்கட்சி உறுப் பினர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர் கள் தங்களது உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு ஆகியோர் கடந்த 15 நாள்களுக்கு முன்பு என்னை சந்தித்து இதே கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்தனர். சட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்துடன் ஆலோசித்து அவர்களின் மனுவை அரசு தலைமை வழக்கறிஞருக்கு அனுப்பி வைத்துள்ளோம். சட்ட வல்லுநர்களின் ஆலோசனை பெற்று இது தொடர்பாக அரசு பரிசீலித்து வருகிறது.

இந்நிலையில் இந்தப் பிரச்சினையை எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டோர் நேற்றும், இன்றும் எழுப்பியுள்ளனர். அவர்களுக்கு பதில் சொல்லும்போது ‘பரிசீலிக்கப்படும்’ என தெரிவித்திருந்தேன். அனைவரது உணர்வுகளையும் அரசு கவனத்தில் எடுத்துக் கொண்டு நடவடிக்கை எடுக்கும்.

அதுபோல எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 10 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய வேண்டும் என திமுக உறுப்பினர் ஜெ.அன்பழகன் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து அரசு தலைமை வழக்கறிஞர், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.

இவ்வாறு முதல்வர் கே.பழனி சாமி கூறினார்.

SCROLL FOR NEXT