தமிழகம்

கதிராமங்கலம் போராட்டத்தில் கைதான 10 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி: தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

கதிராமங்கலம் போராட்டத்தில் கைதான 10 பேரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் குழாயில் இருந்து கடந்த ஜூன் 30-ம் தேதி கச்சா எண்ணெய் கசிவு ஏற்பட்டதால், அச்சமடைந்த கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அரசு அதிகாரிகளை ஊருக்குள் வரவிடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால் அப் பகுதி கலவர பகுதியாக மாறியது.

இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப் பாளர் பேராசிரியர் ஜெயராமன் உட்பட பத்து பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்கள் திருச்சி மத்திய சிறைக் காவலில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் கைதானவர்கள் 10 பேர் ஜாமீன் வேண்டும் என்று கோரி தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்றத்தி மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

போராட்டத்தால் அரசுக்கு ரூ.3 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. காயம் அடைந்த அரசு அதிகாரிகள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கதிராமங்கலத்தில் மக்கள் இன்னும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பவில்லை. இதனால் 10 பேருக்கும் ஜாமீன் வழங்க முடியாது என்று நீதிமன்றம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

SCROLL FOR NEXT