புதுச்சேரியின் பறவைகள் சரணாலயமான ஊசுட்டேரிக்கு இனப்பெருக்கம் செய்ய வரும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பறவைகளைப் பிடிக்க மீன்களுக்கு மருந்து கலந்த தீனியை தூவி வேட்டையாடுகின்றனர்.
புதுச்சேரியில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் 70 ஏக்கர் பரப்பளவில் உள்ளது ஊசுட்டேரி. புதுச்சேரியில் உள்ள 84 ஏரிகளில் மிகப்பெரிய ஏரியாக விளங்கும் இதனை நம்பி, புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் 50 க்கும் மேற்பட்ட விவசாய கிராமங்கள் உள்ளன. ஏரி மற்றும் சுற்றியுள்ள விவசாய நிலத்தை நாடியும் கோடைகாலத்தில் ஏராளமான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பறவைகள் இனப்பெருக்கத்துக்காக இங்கு படையெடுக்கின்றன. இதனால் பறவை சரணாலயமாக ஊசுட்டேரி அறிவிக்கப்பட்டு ஆண்டுகள் பல கடந்து, பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
தற்போது கோடைகாலம் முடிந்தாலும் பறவைகளின் வருகை குறைந்தபாடில்லை. பருவமழை பொய்த்ததால் ஊசுட்டேரி வறண்டு வருகிறது. இருப்பினும் காய்ந்த ஏரியின் ஒரு பகுதியில் இனப்பெருக்கமும், நீர் உள்ள பகுதியில் உணவையும் தேடி பறவைகள் தங்கி மகிழ்கின்றன. ஆனால் ஒரு கூட்டம் இரவில் வலைவிரித்தும், மருந்து கலந்த தீனியை தூவி வைத்தும் இந்தப் பறவைகளை வேட்டையாடுகின்றன.
இதுதொடர்பாக இயற்கை ஆர்வலர்கள் தரப்பில் கூறியதாவது:
ஏரிக்கரையோரம் மீன்களுக்கு மருந்து கலந்த தீனியை விஷமிகள் தூவுகின்றனர். அந்த மீன்களைச் சாப்பிடும் பறவைகள் மயங்கிய நிலையில் ஏரி மற்றும் சுற்றியுள்ள வயல்வெளிகளில் விழுகின்றன. மயங்கியும் இறந்தும் கிடக்கும் பறவைகளை விஷமிகள் சாதாரணமாக வந்து எடுத்துச் சென்று உணவகங்களில் விற்கின்றனர். இதில் உள்நாட்டு, வெளிநாட்டு பறவைகள் ஏராளமானவை பலியாகியுள்ளன.
ஏரிக்கு வரும் பறவைகளை இந்த வேட்டையில் இருந்து காப்பாற்றுவது பறவையினத்திற்கு மட்டுமல்ல; அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கும் நல்லதாகும்.
பிரெஞ்சு ஆட்சி காலத்தில் ஊசுட்டேரியில் இருந்து பல கிராமங்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் வாய்க்கால் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. அத்தகைய ஏரியில் ஆங்காங்கே மணல் திட்டுகளை அமைத்து மரங்களை வளர்த்தால் நீரையும் பறவைகளையும் பாதுகாக்க முடியும் என்றும் இயற்கை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
ஊசுடு ஏரியின் அவல நிலை குறித்து வாட்ஸ் அப்பில் ஆளுநர் கிரண்பேடி வெளியிட்டுள்ள படங்கள்.
ஊசுட்டேரி கட்டமைப்பு வசதிகளை ஒரு வாரத்தில் சீரமைக்க ஆளுநர் உத்தரவு
ஊசுட்டேரியில் கட்டமைப்பு வசதிகளை ஒரு வாரத்தில் சீரமைக்க ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.
வார இறுதி நாட்களில் புதுவையின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று கிரண்பேடி ஆய்வு செய்து வருகிறார். கடந்த வாரம் ஊசுட்டேரியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு மேசை, சுற்றுலா பயணிகள் அமருமிடம் போன்றவை மிகவும் மோசமான நிலையில் உடைந்து காணப்பட்டன. சுறறுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் ஊசுட்டேரியில் கட்டமைப்பு வசதிகள் மோசமாக இருப்பதை கண்டு கிரண்பேடி அதிர்ச்சி அடைந்தார்.
சுற்றுலா துறை அதிகாரிகள் வாரந்தோறும் கள ஆய்வுக்கு செல்ல வேண்டும். பொதுமக்கள் பங்களிப்பும் இதில் அவசியமாகும். புதுவையில் சுற்றுலா கட்டமைப்பு வசதி இவ்வளவு மோசமாக உள்ளது. தொடர்புடைய அதிகாரிகள் ஒரு வாரத்தில் ஊசுட்டேரி பகுதியில் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். இல்லை என்றால் துறை ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும். புதிய சுற்றுலா துறை செயலாளர் இதில் கவனம் செலுத்த வேண்டும் என கிரண்பேடி அறிவுறுத்தி நேற்று வாட்ஸ் அப்பில் தகவல் வெளியிட்டுள்ளார்.