காவிரி டெல்டா விவசாயிகளின் போராட்டத்துக்கு பா.ம.க.ஆதரவு அளிப்பதாக அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
இது தொடர்பான அறிக்கையில், "காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் சுமார் 50 டி.எம்.சி. தண்ணீரை தேக்கி வைக்கும் வகையில் இரு அணைகளை கட்டுவதற்கான பணிகளை கர்நாடக அரசு தொடங்கியிருக்கிறது. இந்த அணைகள் கட்டப்பட்டால் தமிழகத்தில் காவிரி பாயும் மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும் ஆபத்து உள்ளது.
கடந்த காலங்களில் மின்சாரம் உற்பத்தி செய்யப்போவதாகக் கூறி மேகதாது பகுதியில் அணை கட்ட கர்நாடக அரசு முயன்ற போதெல்லாம் அதை நான் கடுமையாக எதிர்த்திருக்கிறேன்.
தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் இந்த பிரச்சினையில் ஒன்று பட்டு குரல் கொடுப்பதன் மூலம் தான் தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள இந்த ஆபத்தை முறியடிக்க முடியும்.
மேகதாது பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே அணைகளை கட்டும் கர்நாடக அரசை கண்டித்தும், இந்த முயற்சியை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் தஞ்சாவூர், நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள உழவர்கள் வரும் 22 ஆம் தேதி முழு அடைப்பு போராட்டமும், சாலை மறியல், தொடர்வண்டி மறியல் போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இப்போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும்படி உழவர் சங்க நிர்வாகிகள் குழு என்னை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வேண்டுகோள் விடுத்தனர். பா.ம.க. தலைவர் ஜி.கே. மணியையும் சந்தித்து இதுகுறித்து பேசியுள்ளனர்.
காவிரி பாசன மாவட்டங்களின் வளமையும், செழுமையும் குறைந்து வரும் நிலையில், இருக்கும் வளங்களையாவது பாதுகாக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் நமக்கு உள்ளது.
எனவே, வரும் 22ஆம் தேதி காவிரி பாசன மாவட்ட உழவர்கள் நடத்தும் போராட்டங்களுக்கு பா.ம.க. ஆதரவளிக்கும். தஞ்சாவூர், நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பா.ம.க.வினரும் இப்போராட்டத்தை ஆதரிப்பார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.