தமிழகம்

கோடையை கருதி தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள்: அணையை திறந்து வைத்து அமைச்சர் வேண்டுகோள்

செய்திப்பிரிவு

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப் பட்டி வட்டத்தில் வாணியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணைக்கு சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள சேர்வராயன் மலையின் ஒரு சரிவில் பெய்யும் மழை நீர் வந்து சேரும்.

தற்போது அணையில் குறைந்த அளவே தண்ணீர் உள்ள நிலையிலும், அப்பகுதி மக்களின் குடிநீர் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவைக்கு உதவும் வகையில் அணையில் தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை வைத்து வந்தனர். அதையேற்று, நேற்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தண்ணீரை திறந்து வைத்தார்.

தற்போது திறக்கப்பட்டுள்ள தண்ணீரின் மூலம் பாசன பகுதிகளின் நிலத்தடி நீர் மட்டம் உயரும். இதன்மூலம் கால்நடைகளுக்கும் விவசாய பணிகளுக்கும் ஓரளவு தண்ணீர் கிடைக்கும். தண்ணீரை திறந்து வைத்து அமைச்சர் பேசியது:

கடும் கோடையும், குடிநீர் பற்றாக்குறையும் நிலவி வரும் சூழலில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வாணியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இந்த தண்ணீரை வீணாக்காமலும், விவசாயிகள் உள்ளிட்டோர் தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் சிக்கனமாக பயன் படுத்தியும் உதவிட வேண்டும்.

இவ்வாறு பேசினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் விவேகானந்தன், பாப்பி ரெட்டிப்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் பழனியப்பன், கோட்டாட்சியர் கவிதா மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT