திருவாரூர் நகராட்சியின் நிர்வாக சீர்கேடு காரணமாக சாலை, சுகாதாரம், குடிநீர் உட்பட அனைத்துப் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ள தையடுத்து பொதுமக்கள் அவதியடைந்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடந்த வாரம் பெய்த சிறு மழையால் சேறும் சகதியுமாகக் காட்சியளித்தது திருவாரூர் நகரம். குறிப்பாக மேலக் கடைத்தெரு, எடத்தெரு, நெய் விளக்குத் தோப்பு உட்பட பல பகுதிகளில் இதே நிலைதான். தென்றல் நகர் உட்பட மேலும் சில பகுதிகளில் புதை சாக்கடை சந்திப்புகளிலிருந்து சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் துர்நாற்றம் வீசியது.
டெண்டர் விடப்பட்டும் சாலைகள் அமைக்கப்படாத சிவம் நகர்.
புதை சாக்கடை வசதி இல்லாத பகுதிகளில் கழிவுநீர் கட்டுமானங்கள் சிதிலமடைந்து திறந்தவெளியில் சாக்கடை வழிந்தோடுவதால் நகரில் சுகாதார சீர்கேடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
2 ஆண்டுகளுக்கு முன், வறட்சி பாதிப்பைச் சமாளிக்க குடிநீருக்காக அமைக்கப்பட்ட தொட்டியுடன் கூடிய சிறிய பம்ப்செட் பல இடங்களில் செயல்படவில்லை. தேவையான இடங்களில் குப்பைத்தொட்டிகள் வைக்கப்படவில்லை. வைக்கப்பட்ட இடங்களிலும் குப்பைத் தொட்டிகள் சேதமடைந்துவிட்டன. துப்புரவுப் பணியாளர்கள் பற்றாக்குறையால் குப்பை அகற்றும் பணிகள் முழுமையாக நடைபெறவில்லை.
குப்பைத் தொட்டி வைக்கப்படாமல் சாலையில் குப்பை கொட்டப்படும் அங்காளம்மன் கோயில் சந்திப்பு. அருகில், செயல்படாத நிலையில் உள்ள குடிநீர் தொட்டியுடன் கூடிய பம்ப்செட்.
நடவடிக்கை எடுக்கப்படுமா?
இதுபோன்ற குறைபாடுகளின் ஒட்டுமொத்த உருவமாகக் காட்சியளிக்கும் திருவாரூர் நகராட்சி நிர்வாகத்தின் கவனத்துக்கு பிரச்சினைகளைக் கொண்டுசெல்ல உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இல்லாதநிலையில் சம்பந்தப்பட்ட தனி அலுவலர்கள், வார்டு மக்களைச் சந்தித்து குறைகளை கேட்டறிய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முன்னதாக, மாவட்டத் தலைநகரமாக இருந்தும் அடிப்படை சுகாதாரம் படுமோசமாக இருப்பதை உணர்ந்து, நகராட்சி ஆணையர் உட்பட அனைத்து அதிகாரிகளையும் அழைத்துச் சென்று ஆட்சியரே ஆய்வு மேற்கொண்டால்தான் தமிழக அரசுக்கு நகர மக்களின் வேதனை புரியும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு நிர்வாகி ஜி.சுபாஷ்காந்தி கூறியது:
கொசு உற்பத்தியாகாமல் தடுக்க வேண்டிய நகராட்சி நிர்வாகம், ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் புகுந்து சோதனையிட்டு பிரிட்ஜ் வழியாகக்கூட தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தியாகிவிடக்கூடாது என மக்களுக்கு அறிவுரை கூறுகிறது. ஆனால், தங்களின் கட்டுப்பாட்டில் உள்ள குளங்களைப் பராமரிக்காமல் குப்பைமேடாகி கொசு உற்பத்தித் தளமாக மாறிவிட்டதை நகராட்சி கவனிக்க மறுக்கிறது.
மேலும், திருவாரூர் நகராட்சி தோற்றுவிக்கப்பட்டு கடந்த 2014-ம் ஆண்டுடன் நூறாண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், தமிழக அரசிடமிருந்து மற்ற நகராட்சிகளுக்கு வழங்கியதைப்போல திருவாரூருக்கு நூற்றாண்டு சிறப்பு நிதியோ, அல்லது சிறப்புத் திட்டங்களோ அறிவிக்கப்படவில்லை. குறைந்தபட்சம் ஒரு இனிப்பு வழங்கிக்கூட கொண்டாடவில்லை. இப்படி புறக்கணிப்பதற்கு முக்கிய காரணம் அரசியல் காழ்ப்புணர்ச்சிதான். அதனை மறந்து, ரூ.100 கோடி சிறப்பு நிதியை ஒதுக்கி நகரத்தை மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒற்றுமையுடன் முயற்சிக்க வேண்டும்.
அழகிரி காலனி பேபி கூறியது:
அழகிரி காலனியில் 250 வீடுகள் உள்ளன. திருவாரூர் பேருந்து நிலையத்திலிருந்து 400 மீட்டர் தொலைவிலேயே உள்ள இப்பகுதி வீடுகளின் கழிவுநீரை பழவனங்குடி வாய்க்காலில்தான் விட வேண்டி யுள்ளது. குப்பைத் தொட்டிகள் வைக்கப்படாததால் குப்பையையும் வாய்க்காலில் கொட்ட வேண்டிய நிலை உள்ளது. துப்புரவுப் பணியும் நடைபெறவில்லை. எனவே, கொசு உற்பத்தி அதிகரித்து மக்கள் அவதிப்படுகின்றனர்.
சிறுமழையிலேயே சாலையில் தண்ணீர் தேங்கும் எடத்தெரு.
நெய்விளக்குத்தோப்பு சலவைத் தொழிலாளி பொய்யாமொழி கூறியது:
நகரத்தின் மையத்திலேயே நகராட்சி குப்பைக்கிடங்கு உள்ளது. குப்பை தேங்கியவுடன் மர்ம நபர்கள், அதற்கு தீ வைத்து விடுகின்றனர். அதனால் ஏற்படும் புகைமண்டலமும், எரியும் பாலித்தீன் குப்பையால் ஏற்படும் துர்நாற்றமும் குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. நெய்விளக்குத் தோப்பு, கிடாரங்கொண்டான், விஜயபுரம், மருதப்பட்டினம் வரை புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குப்பை லாரி ஒன்று எரிந்து சேதமடைந்துவிட்டது. குப்பையைத் தரம்பிரித்து மேலாண்மை செய்யும் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார்கள். ஆனால், அதற்கான நடவடிக்கை என்ன ஆனது எனத் தெரியவில்லை. அதுபோல திறந்தவெளி மயானத்துக்கு மாற்றாக கட்டப்பட்டு 9 ஆண்டுகளுக்கு மேலாகியும் பயன்பாட்டுக்கு வராத எரிவாயு தகனமேடை குறித்தும் நகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை.
கழிவுநீர் கட்டுமானங்கள் சிதிலமடைந்த நிலையில் திறந்த வெளியில் சாக்கடை நீர் தேங்கும் அழகிரி காலனி பகுதி.
நகராட்சி ஆணையர் காந்திராஜ் கூறியபோது,
"நான் திருவாரூர் நகராட்சி ஆணையராகப் பொறுப்பேற்று ஒரு வாரம்தான் ஆகிறது. நகரின் முக்கிய பிரச்சினைகள் குறித்து பலவற்றைக் கண்டறிந்துள்ளேன். புதை சாக்கடை, கழிவுநீர் கட்டமைப்புகள் தொடர்பான பணிகளை மேற்கொள்ள கவனம் செலுத்த உள்ளேன். மேலும், ஆக்கிரமிப்பு அகற்றுதல் குறித்தும் நடவடிக்கை எடுக்கப்படும். வறட்சியை எதிர்கொள்ளும் விதமாக நீராதாரங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.