மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், “தமிழகத்தில் கடந்த 4.10.2007 முதல் கேபிள் டிவி தொழிலை அரசே நடத்தி வருகிறது. வீட்டு இணைப்புக்கு மாதம் ரூ.70 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஒவ்வொரு இணைப்புக்கும் ரூ.160 வரை கட்டணம் வசூலிக் கின்றனர்.
கட்டணம் கூடுதலாக வசூலிப்பதை தடுக்கவும், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதை தடுக்கவும் மின் கட்டண இணைப்பு எண் போல, கேபிள் டிவி இணைப்பு உள்ள வீடுகளுக்கும் தனி எண் வழங்கி, கேபிள் கட்டணத்தை மின்வாரிய அலுவலகம், தபால் அலுவலகத்தில் கட்டுவதற்கு வசதி செய்ய வேண்டும்” என கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் மனுவைப் பரிசீலித்து ஒரு மாதத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க தமிழ்நாடு அரசு கேபிள் டிவி மேலாண்மை இயக்குநருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.