தமிழகம்

பத்திரப் பதிவு கட்டணத்தை குறைக்கும் திட்டம் எதுவும் இல்லை: அமைச்சர் கே.சி.வீரமணி அறிவிப்பு

செய்திப்பிரிவு

பத்திரப்பதிவு மூலம் கிடைக்கும் வருவாய் அரசின் நலத்திட்டங் களுக்கு செலவிடப்படும் என்பதால் அதற்கான கட்டணத்தை குறைக்கும் திட்டம் எதுவும் இல்லை என வணிகவரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் எஸ்.விஜயதரணி (காங்கிரஸ்), மாதவரம் எஸ்.சுதர்சனம் (திமுக) ஆகியோர் கொண்டு வந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்துக்கு பதிலளித்து அமைச்சர் பேசியதாவது:

பத்திரப் பதிவுக்கான வழிகாட்டி மதிப்பை நிர்ணயம் செய்ய 17-6-2016 முதல் 4-4-2017 வரை அதற்கென அமைக்கப்பட்ட மதிப்பீட்டுக் குழு வால் பல்வேறு கூட்டங்கள் நடத்தப் பட்டன. குஜராத், ஆந்திரா, கர் நாடகா ஆகிய மாநிலங்களில் வழி காட்டி மதிப்பு நிர்ணயம் செய்யும் முறையை ஆய்வு செய்ய 3 குழுக்கள் அமைக்கப்பட்டன. பல் வேறு தொழில், வர்த்தக சங்கங்கள், அமைப்புகளிடம் நேரடியாக விவாதங்கள் நடத்தப்பட்டன.

பத்திரப் பதிவு குறைந்துள்ளதும், பொது அதிகார ஆவணப் பதிவு அதிகரித்துள்ளதும் மதிப்பீட்டுக் குழுவால் விவாதிக்கப்பட்டன. குழுக்களின் அறிக்கையை ஆராய்ந்து பார்த்ததில் தமிழகத்தில் வழிகாட்டி மதிப்பு சந்தை மதிப்பை விட அதிகமாக உள்ளது கண்டறியப் பட்டது.

2012-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டி மதிப் பில் 33 சதவீதத்தை குறைக்கலாம் என மதிப்பீட்டுக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதனால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடு செய்ய விற்பனை, தானம், பரிவர்த்தனை, குடும்ப நபர்களுக்கு இடையில் ஏற்படும் செட்டில்மென்ட் போன்ற ஆவணங்களுக்கு பதிவுக் கட்டணத்தை ஒரு சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக உயர்த்தலாம் என பரிந்துரை செய்யப்பட்டது. அதன்படி மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டது.

பதிவுக் கட்டணம் உயர்த்தப் பட்ட போதிலும் அரசுக்கு ஆண் டுக்கு ரூ.430 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் நிலை உள்ளது. பதிவுக் கட்டண உயர்வால் கிடைக்கும் வருவாய் அரசின் நலத்திட்டங் களுக்கு செலவிடப்படும் என்பதால் அதை குறைக்கும் திட்டம் எதுவும் இல்லை. உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை பதிவு செய்ய வேண்டும் என அனைத்து சார்பதிவாளர்களுக்கும் பதிவுத் துறை தலைவரால் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT