தமிழகம்

கும்பகோணத்தில் அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு; கம்யூனிஸ்ட் உண்ணாவிரதப் போராட்டம் ஒத்திவைப்பு

செய்திப்பிரிவு

கும்பகோணம் நகராட்சி பகுதியில் ஓடும் ஒலைப்பட்டினம் வாய்க்கால் தலைப்பில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி இன்று (மார்ச் 14) நடைபெறவிருந்த உண்ணாவிரதப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நீர்நிலைகளை பாதுகாக்க வலியுறுத்தி கும்பகோணம் நகராட்சியில் ஓலைப்பட்டினம் வாய்க்கால் உள்ளிட்ட 5 பாசன வாய்க்கால்கள் மற்றும் 38 குளங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி ,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இன்று முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்திருந்தது.

இந்நிலையில், கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் கார்த்திகேயன் தலைமையில், நகராட்சி நகரமைப்பு அலுவலர் பாஸ்கரன், பொதுப்பணித் துறை உதவி பொறியாளர் அன்பானந்தன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சி. மகேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் பாரதி, நகரச் செயலாளர் மதியழகன் ஆகியோர் பங்கேற்ற அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் பேசும்போது, “மகாமகத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 5 பாசன வாய்க்கால்களும், 7 பிரிவு வாய்க்கால்களும் தூர்வாரப் பட்டது. ஆனால், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. இது தொடர்பாக அனைத்து அதிகாரிகளுக்கும் புகார் அனுப்பியும், மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை.

38 குளங்களுக்கும் இந்த 5 பாசன வாய்க்கால்களிலிருந்து தான் தண்ணீர் வரும். ஆயிகுளத்தின் அருகில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் முன்பு வாய்க்காலை அடைத்து பாதை அமைத்துள்ளனர். இதற்கு யார் அனுமதியளித்தது.

மேலும், நீர் நிலைகளை பாதுகாப்பது என்பது கூடுதல் சமூக பொறுப்பாகும், இது மிகப்பெரிய பிரச்சினை என்பதால், ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால், மிகப்பெரிய அளவில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவோம். எனவே, அதிகாரிகள் மக்களின் கருத்துகளை அறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

அப்போது நகராட்சி நகரமைப்பு அலுவலர் பாஸ்கர் கூறும்போது, “ஓலைப்பட்டினம் உள்ளிட்ட வாய்க்கால்களை கும்பகோணம் நகராட்சி பராமரிப்பு பணியைத் தான் செய்து வருகின்றது. அதன் நீளம் அகலம் முழுமையான அளவீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

வாய்க்காலில் ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டுள்ள வீடுகளில் புகுந்து தான் அளவீடு செய்யவேண்டியுள்ளது. எங்களுடைய பணி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்வது தான். 44 குளங்களிலும் எல்லை வரையறுக்கப்பட்டுள்ளது” என்றார்.

பொதுப்பணித் துறை உதவி பொறியாளர் அன்பானந்தன் பேசும்போது, “கோப்புகளை பார்த்து எந்தந்த இடங்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளதோ, அவர்களுக்கு எச்சரிக்கை கடிதம் அனுப்படும். அதன் பின்னர் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இடங்களை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.

வட்டாட்சியர் கார்த்திகேயன் பேசும்போது, “இது தொடர்பாக மூன்று மாத அவகாசத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதியளித்தார்.

அதிகாரிகளின் வாக்குறுதிகளை ஏற்று இன்று நடைபெறவிருந்த உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT