தமிழகம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில மாநாடு: புதிய இணையதளம் தொடக்கம்

செய்திப்பிரிவு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21-வது தமிழ் மாநில மாநாடு, சென்னையில் பிப்ரவரி 16 முதல் 19 வரை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கான வரவேற்புக் குழு சென்னையில் நேற்று அமைக்கப்பட்டது. மேலும் மாநாட்டுக்காக புதிய இணையதளமும் தொடங்கப்பட்டது.

மாநாட்டுக்கான வரவேற்புக் குழுவின் தலைவராக சட்டமன்ற உறுப்பினர் க.பீம்ராவ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

செயலாளராக தென் சென்னை மாவட்டச் செயலாளர் ஏ.பாக்கியம், பொருளாளராக தென் சென்னை மாவட்ட உறுப்பினர் எஸ்.கருணாகரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 141 பேர் கொண்ட வரவேற்புக் குழுவில் 26 துணை தலைவர்கள், 21 துணை செயலாளர்கள் உள்ளனர்.

மாநாட்டுக்கான சின்னத்தை கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டார். மாநில மாநாட்டின் நிகழ்வுகளை பதிவேற்றம் செய்ய, தென் சென்னை மாவட்டக்குழு சார்பாக உருவாக்கப்பட்ட இணையதளத்தை கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் வே.மீனாட்சி சுந்தரம் தொடங்கி வைத்தார்.

மாநாட்டுக்கான பிரச்சார குறுந்தகடும் வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாநில மாநாட்டுக்கான நிதி வசூலை சுதந்திரப் போராட்ட வீரர் என்.சங்கரய்யா தொடங்கி வைத்தார். முதல் நாளில் 15 லட்ச ரூபாய் நிதி வசூலானது.

இந்நிகழ்ச்சியில் ஜி.ராமகிருஷ்ணன் பேசியதாவது:

பாஜகவின் மதவாதத்தை எதிர்த்தும், காங்கிரஸ் கட்சியின் ஊழலை எதிர்த்தும் குரல் கொடுக்க மார்க்சிஸ்ட் கட்சிக்கு மட்டுமே தகுதி இருக்கிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21-வது மாநில மாநாடு, தமிழகத்தில் திருப்பு முனையாக இருக்கும். தமிழக மக்கள் தொகையில் ஏழில் ஒரு பங்கு மக்கள் வசிக்கும் சென்னையில் இந்த மாநாடு சிறப்பாக நடைபெறும் என்று நம்பிக்கை இருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT