கூடுதல் வட்டி வசூலிக்கும் தனியார் நிதி நிறுவனங்களை ரிசர்வ் வங்கி தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு வட்டி வரையறை செய்யவில்லை என்ற ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கை யையும் நீதிமன்றம் ரத்து செய்தது.
மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஜெயருத்திரன் தாக்கல் செய்த மனு விவரம்:
தமிழகத்தில் அதிக வட்டி வசூ லிப்பதைத் தடுக்க சட்டம் உள்ளது. கந்துவட்டி வசூல் தடுப்புச் சட்டமும் அமலில் உள்ளது. இந்தச் சட்டத் தில் 12 சதவீதத்துக்கு மேல் வட்டி வசூலிக்கக் கூடாது என்று கூறப் பட்டுள்ளது. ஆனால் சில பைனான்ஸ் நிறுவனங்கள் நகைக் கடனுக்கு 24 சதவீதம் முதல் 30 சத வீதம் வரை வட்டி வசூலிக்கின்றனர். இதனால் அடகு வைத்தவர்கள் நகைகளை மீட்க முடியாமல் தவிக்கின்றனர்.
தனியார் நிதி நிறுவனங்கள் அதிக வட்டி வசூலிப்பதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகளின் நிதித் துறைக்கு அதிகாரம் உள்ளது.
இந்த நிலையில், வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு வட்டி வரையறை செய்யவில்லை என்று ரிசர்வ் வங்கி 30.5.2012 அன்று உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை ரத்து செய்து, கூடுதல் வட்டி வசூலிப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், நீதிபதி வி. தனபாலன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு, தலைமை நீதிபதி பிறப்பித்த உத்தரவு: வங்கி சாரா நிதி நிறுவனங்கள் வழங்கும் நகைக் கடன்களுக்கு வட்டி நிர்ணயம் செய்வது தொடர்பாக அவ்வப்போது ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கைகளை வங்கி சாரா நிதி நிறுவனங்கள் பின்பற்றுகின்றனவா என்பதை ரிசர்வ் வங்கி தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும்.
அதிக வட்டி வசூலிப்பது விதிமீறலாகும். அதிக வட்டி வசூலிக்கக் கூடாது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஆனால், எவ்வளவு வட்டி என்பதை தெரிவிக்கவில்லை. இது, நியாயமற்றது. கந்துவட்டியால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வங்கி சாரா நிதி நிறுவனங்கள் நியாயமாக தொழில் செய்கின்றனவா, விதிகளைப் பின்பற்றுகின்றனவா என்பதை ரிசர்வ் வங்கி தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மத்திய அரசும் உரிய கவனம் செலுத்த வேண்டும். அதிக வட்டி வசூலிப்பதைத் தடுப்பது தொடர்பாக 3 மாதங்களில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு வட்டி வரையறை செய்யவில்லை என்ற ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கை ரத்து செய்யப்படுகிறது என்று தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.