சிவகங்கை பகுதியில் நேற்று மாலை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. திருப்பத்தூர் பகுதியில் மின்கம்பங்கள், மரங்கள் முறிந்து விழுந்ததால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சிவகங்கையில் சில வாரங்களாக கடுமையான வெயில் நிலவுகிறது. அனல் காற்று பிற்பகலில் வழக்கத்தைவிட அதிகமாக வீசுவதால் மக்கள் வெளியில் நடமாடுவதை தவிர்த்தனர்.
இந் நிலையில், நேற்று பிற்பகலில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. குளிர் காற்றும் வீசியது. மாலையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்தது.
இதேபோல் திருப்பத்தூர் பகுதியில் சூறாவளிக் காற்றுடன் மழை பெய்தது. இதில் திருப்பத்தூர்-காரைக்குடி சாலையில் மணல்மேல்பட்டி, தம்பிபட்டியில் 15-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள், 25-க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ரயில்கள் தாமதம்
சிவகங்கை-மானாமதுரை சாலையில் கொன்னக்குளம் அருகே ரயில் தண்டவாளத்தில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் ராமேசுவரம்-திருச்சி ரயில் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது. அதேபோல் மானாமதுரை அருகே வாகுடியில் தண்டவாளத்தில் மரங்கள் விழுந்ததால் மதுரை-ராமேசுவரம் பயணிகள் ரயில் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது.
மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் மானாமதுரை அருகே முத்தனேந்தலில் பலத்த காற்றுக்கு மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருப்பத்தூர் அருகே தம்பிபட்டியில் மின் கம்பம் முறிந்து சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.