மைல் கற்களில் இந்தி எழுத்துக்கு திமுகவே காரணம் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.
இது தொடர்பாக திருச்சியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மைல் கற்களில் இந்தியை முதன்மைப்படுத்தலாம் என்பது திமுக அங்கம் வகித்த முந்தைய மத்திய அரசின் திட்டம். அதுவே தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மைல் கற்களில் இந்தியை எழுதுவதின் மூலம் இந்தியைப் பரப்பும் திட்டம் இல்லை. இதனால் தமிழ் மொழி அழிக்கப்படவில்லை. இது ஒரு போராட்டத்தை தூண்டிவிடக் கூடிய முயற்சி.
2004 டிசம்பர் 24-ம் தேதி மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலு மூலம் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மைல் கற்களில் இந்தியை எழுதும் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. 2006-ம் ஆண்டிலும் திமுகவினரால் அது வலியுறுத்தப்பட்டது. எனவே, மைல் கற்களில் இந்தி எழுத்துக்கு திமுகவே காரணம்''என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.