தமிழகம்

வெட்டப்பட்டு நீர்நிலைகளில் கிடக்கும் சீமைக்கருவேல மரங்களை முழுமையாக அகற்றுவது எப்போது?

செய்திப்பிரிவு

வறட்சியிலும் வளரும் தன்மையுடைய சீமைக்கருவேல மரங்களால் நிலத்தடி நீர் குறைவதுடன், விவசாயமும் பாதிக்கப்படுகிறது. நோய், பூச்சித் தாக்குதலால் பாதிக்கப்படாத இவை, பிற செடிகள் வளர்வதையும் தடுக்கிறது.

தற்போது தமிழகம் முழுவதும் கடும் வறட்சி நிலவுகிறது. பல இடங்களில் 1,000 அடிக்குகீழ் நிலத்தடி நீர் சென்றுவிட்டது. குடிநீருக்கே மக்கள் அவதிப்படுகின்றனர். இதற்கு சீமைக்கருவேல மரங்களும் முக்கியக் காரணம் என்று புகார்கள் எழுந்தன.

சீமைக்கருவேல மரங்களை அகற்றி, அதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியில் அரசு மற்றும் தன்னார்வ அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர்.

கோவையில் தனியார் பட்டா நிலங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை 15 நாட்களுக்குள் வெட்டி அப்புறப்படுத்துமாறு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. பலரும் தங்களது இடத்தில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றத் தொடங்கியுள்ளனர்.

அதேசமயம், பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகளின் கரையோரங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை வெட்டும் வகையில், அவற்றை ஏலம் விடும் நடவடிக்கையிலும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். பல இடங்களில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளன.

கோவை பேரூர் பெரிய குளத்தில், குளங்கள் பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்தப் பணி நடக்கிறது. இதேபோல, மதிமுக மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில், நொய்யலின் கிளையான தன்னாசிபள்ளம், தாளமடல் ஓடை, வண்ணத்தாங்கரை பகுதிகளிலும் சீமைக்கருவேல மரங்களை வெட்டி அகற்றும் பணி நடைபெறுகிறது. இவ்வாறு அகற்றப்படும் மரங்கள், நீர்நிலைகளின் ஓரம் குவிக்கப்படுகின்றன.

பேரூர் பெரிய குளத்தில் இவ்வாறு வெட்டப்பட்ட மரங்கள், வறண்டு கிடக்கும் குளத்தின் நடுவில் குவிந்து கிடக்கின்றன. மழை பெய்தாலோ அல்லது காற்றின் மூலமாகவோ இவற்றின் காய்ந்த இலைகள், விதைகள் குளமெங்கும் பரவி, பல மடங்கு மரங்கள் வளரக் காரணமாகிவிடும். எனவே, இவற்றை முழுமையாக அகற்ற வேண்டுமென இப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர் மணிகண்டன் கூறியபோது, “சீமைக்கருவேல மரங்களை அகற்றி, ஓரிடத்தில் குவித்துவைக்க மட்டுமே அனுமதி பெற்றுள்ளோம். அவற்றின் மதிப்பு அறிந்து, ஏலம் விடுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏலம் போகாத சிறு மரங்கள் இருந்தால், அதை அப்புறப்படுத்த தயாராகவே உள்ளோம்” என்றார்.

மதிமுக இளைஞரணி மாநிலச் செயலாளர் வே.ஈஸ்வரன் கூறும்போது, “பெரிய மரங்களை மட்டுமே பொதுப்பணித் துறை ஏலம் விடும். சிறு, சிறு முட்களை ஒரே இடத்தில் குவித்து, தீ வைத்து அழிக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த மரங்களை அகற்றினாலும், அதன் விதைகளால் மறுபடியும் நாற்றுகள் துளிர்க்கும். அப்போது, மீண்டும் அவற்றை அகற்றும் பணியில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளோம். முற்றிலுமாக அகற்றி விட்டால், மீண்டும் முளைக்காது” என்றார்.

‘தி இந்து’ செய்தி எதிரொலி

ஒரத்துப்பாளையம் நொய்யல் அணையில் சுமார் 8 கிலோமீ்ட்டர் தொலைவுக்கு சீமைக்கருவேல மரங்கள் அடர்த்தியாக வளர்ந்துள்ளன. ஏறத்தாழ 7 ஆண்டுகளாக வளர்ந்துள்ள இவற்றால் நிலத்தடி நீர் குறைந்துள்ளதுடன், நீரில் கசப்புத் தன்மை அதிகரித்துள்ளது. இதனால் வேளாண்மையும் பாதிக்கப்பட்டுள்ளதாக இப்பகுதி விவசாயிகள் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக தி இந்துவில் செய்தி வெளியானது.

இதையடுத்து, இங்கு சீமைக்கருவேல மரங்களை வெட்டி அகற்ற பொதுப்பணித் துறை ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக நேற்று ஏலம் நடைபெற்றது. இதுகுறித்து கொடுமணல் விவசாயிகள் கூறும்போது, “அணையிலிருந்து 500 மீட்டர் தொலைவுக்கு ஆற்றின் இருபுறமும் உள்ள மரங்களை வெட்ட ஏலம் விட இருப்பதாகக் கூறியுள்ளனர். ஒரு வாரத்துக்குள் அவை வெட்டப்பட்டுவிடும். அடுத்தடுத்து ஏலம் விட்டு, 2 மாதத்தில் மரங்கள் அகற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்” என்றனர்.

ஈரோடு மாவட்ட பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறும்போது, “முதல் பகுதி ஏலம் விடுவதில் சிறிது தாமதம் ஏற்பட்டது. அடுத்தடுத்த ஏலம் விரைவில் நடைபெறும். ஒரு மாதத்துக்குள் மரங்கள் வெட்டி அகற்றப்படும்” என்றனர்.

          
SCROLL FOR NEXT