தமிழகத்தில் மழை 60 சதவீதம் அளவுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள் ளதால், கடும் வறட்சி மாநிலமாக அறிவிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
பருவமழை பொய்த்ததாலும், காவிரியில் தண்ணீ்ர் கிடைக்காத தாலும் தமிழகம் முழுவதும் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. பயிர் பாதிப் பால் தற்கொலை மற்றும் அதிர்ச்சி யால் 106 விவசாயிகள் இறந்துள் ளனர். இதனால், தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன. தமிழக அரசும் பாதிப்புகளை ஆய்வு செய்ய அமைச்சர்கள் தலைமையில் குழுவை அமைத்தது. ஆய்வுப் பணிகள் தொடங்கிவிட்டன. ஆய்வு அறிக்கை முழுமை பெற்றதும் விரைவில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும். ஆனால், பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டே அரசு வறட்சி அறிவிப்பை வெளியிடும்.
வறட்சி அறிவிப்பு எப்படி?
பொதுவாக பருவமழை 50 சதவீதத்துக்கும் அதிகமாக குறை யும் நிலையில், பயிர் பாதிப்பு மற்றும் நீராதாரங்களில் உள்ள நீர் மட்டம் இவற்றின் அடிப்படையில் மாநிலங்களில் வறட்சி நிலை அறி விக்கப்படுகிறது. இதற்கான புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள் ளன. இது தொடர்பாக வருவாய்த் துறை அதிகாரி ஒருவர் கூறிய தாவது:
வறட்சி அறிவிப்புக்கு மழை அளவு, பயிர் பாதிப்பு மற்றும் கள ஆய்வு ஆகிய 3 விஷயங்கள் அவசியம், இதில் மழை அளவு மிகவும் முக்கியம். குறிப்பாக பருவ மழை, கோடை மழை கணக்கில் கொள்ளப்படும். மழைப் பொழிவு 20 முதல் 50 சதவீதம் வரை குறைந்தால் பற்றாக்குறை எனவும், 60 சதவீதத்துக்கு மேல் குறைந்தால் போதிய மழை இல்லை என்றும் கணக்கிடப்படுகிறது. கோடை மழையை பொறுத்தவரை 4 வாரங் களாக தொடர்ந்து பெறும் மழை 50 சதவீதத்துக்கு குறைவாக இருப் பின் அதுவும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. 20 சதவீதம் மழை குறைந்தாலே வறட்சி அறிவிக்க முடியும்.
அடுத்த நிலையில் 4 முக்கிய அம்சங்கள் கணக்கில் கொள்ளப் படுகின்றன. முதலில், குறிப்பிட்ட மண்டலத்தில் இயல்பை விட 50 சதவீதத்துக்கும் குறைவான மழை பொழிவு, குறிப்பிட்ட பகுதிகளில் ஏற்படும் பயிர் பாதிப்பு, மண் வளம் மற்றும் ஈரப்பத நிலை, அணைகள், ஏரிகள் உள்ளிட்ட நீராதாரங்களின் நீர் இருப்பு ஆகியவை கணக்கிடப்படுகின்றன.
மூன்றாவதாக கள ஆய்வு. இந்த கள ஆய்வுதான் தற்போது நடந்து வருகிறது. இதில், குறிப்பிட்ட மாவட்டத்தில் 10 கிராமங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டு, அதில், 5 பகுதிகள் ஆய்வு செய்யப்படும். இதில் 33 முதல் 50 சதவீதம், 50 சதவீதத்துக்கு மேல் சேதம் என பல்வேறு நிலைகளில் ஆய்வு நடக்கிறது. இதன் அடிப்படையில் வறட்சி, கடும் வறட்சி என இரு பிரிவுகளில் வறட்சி நிலவரம் அறிவிக்கப்படுகிறது. வறட்சி பாதித்த மாநிலம் என்பதை மாநில அரசே அறிவிக்கும். வறட்சி பாதிப்பு குறித்த அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பப்படும். கடும் வறட்சி ஏற்பட்டால், மத்திய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிதி கோர முடியும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
என்ன நிவாரணம்?
கடந்த 2013-ல் சென்னை தவிர மற்ற 31 மாவட்டங்களும் வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, நிவாரணம் வழங்கப்பட்டது. அதில், மத்திய, மாநில பேரிடர் நிவாரண நிதிகளைக் கடந்து, தமிழக அரசு கூடுதலாக நிவாரண நிதியை வழங்கியது. இந்நிலையில் தற்போது மாநில பேரிடர் நிவாரண நிதியும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரி கூறும்போது, ‘‘33 சதவீதத்துக்கும் அதிகமான பயிர் பாதிப்பு உள்ள பகுதிகளில் பயிர் பாதிப்புக்கான வறட்சி நிவாரணம் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து விதிகளுக்கு உட்பட்டு நிவாரணம் வழங்கப்படுகிறது. நெற்பயிர் தவிர இதர பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.7 ஆயிரத்து 410, நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.13 ஆயிரத்து 500, கரும்பு உள்ளிட்ட பயிர்களுக்கு ரூ.18 ஆயிரம், தோட்டக்கலை பயிர்களுக்கு ரூ.7 ஆயிரத்து 410 என மாநில பேரிடர் நிதியில் இருந்து வழங்கப்படுகிறது. இது போல் ஒவ்வொரு பாதிப்புக்கும் அதற்கு தகுந்த வகையில் நிதி அறிவிக்கப்பட்டு வழங்கப்படும். இது தவிர பயிர்க்காப்பீட்டுத் தொகையும் வழங்கப்படும்’’ என்றார்.