சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு தொடர்பான துண்டு பிரசுரங்களை வாகன ஓட்டிகளுக்கு காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் வழங்கினார்.
சென்னையில் சாலை விபத்துகளை முற்றிலும் கட்டுப்படுத்த காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு தொடர்பான விழிப்புணர்வு பாடல் அடங்கிய சிடி கடந்த 13-ம் தேதி வெளியிடப்பட்டது. சமூக வலைதளங்களில் வெளியான இந்த பாடலை நேற்று முன்தினம் வரை 15 லட்சத்து 76 ஆயிரத்து 787 பேர் கேட்டுள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக நேற்று “சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஞாயிறு” கடைபிடிக்கப்பட்டது. சென்னையில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் போக்குவரத்து போலீஸார் பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
தியாகராய நகரில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். முறையாக வாகனம் ஓட்டிய சில வாகன ஓட்டிகளுக்கு ரோஜாப் பூ வழங்கி உற்சாகப்படுத்தினார்.
நிகழ்ச்சியில் கூடுதல் போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் அபய் குமார் சிங், இணை ஆணையர் பவானீஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.