தமிழகம்

காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு: ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு சுவாமி தரிசனம்

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அமைந்துள்ள பெருமாள் கோயில்களில் நேற்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ‘கோவிந்தா, கோவிந்தா’ என பக்தி முழக்கமிட்டு பெருமாளை தரிசித்தனர்.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காஞ்சிபுரம் நகரில் அமைந்துள்ள அஷ்டபுஜம் மற்றும் வைகுண்ட பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.

இதில், அஷ்டபுஜம் பெருமாள் கோயிலில் அதிகாலை 4:50 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில், முத்தங்கிசேவையில் மலர் அலங்காரத்துடன் உற்சவர் அஷ்டபுஜ பெருமாள், தேவி, பூதேவி சமேதராய் சொர்க்க வாசலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது, ‘கோவிந்தா, கோவிந்தா’ என உச்சரித்தவாறு பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர்.

இதேபோல், பிரசித்தி பெற்ற வைகுண்ட பெருமாள் கோயிலில் பரமபத வாசல் திறக்கப்பட்டது. இதில், வைகுண்ட பெருமாள் ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டவாறு, தேவி, பூதேவியுடன் அருள்பாலித்தார். பக்தர்கள் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் 3 கி.மீ., நீளத்துக்கு நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசித்தனர். பின்னர், கருடசேவை உற்சவம் நடைபெற்றது. கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பூலோக சொர்க்கமாக கருதப்படும் வரதராஜ பெருமாள் கோயிலில், உற்சவர் ரத்தினங்கியில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள், மதுராந்தகம் ஏரி காத்த கோதண்டராமர் கோயில் உள்ளிட்ட பல்வேறு பெருமாள் கோயில்களிலும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

சிங்கப்பெருமாள்கோவில்

செங்கல்பட்டை அடுத்த சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் அமைந்துள்ள  பாடலாத்திரி நரசிம்மப்பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா கடந்த டிச.28-ம் தேதி திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சி யுடன் தொடங்கியது. பகற்பத்து உற்சவம் 29-ம் தேதி தொடங் கியது. நரசிம்மப்பெருமாள் தினமும் ஓர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

இந்நிலையில், நேற்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பக்தர்கள் ‘கோவிந்தா, கோவிந்தா’ என பக்தி முழக்கமிட்டு சுவாமியை வழிபட்டனர். பரமபத வாசல் வழியாக சென்று உற்சவரை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

வீரராகவபெருமாள் கோயில்

108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் திருவள்ளூர் வீரராகவபெருமாள் கோயிலில் காலை 5 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வீரராகவபெருமாள், ஸ்ரீதேவி. பூதேவியுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். கோவிலில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, ’ கோவிந்தா, கோவிந்தா’ என பக்தி முழக்கமிட்டு பெருமாளை வழிபட்டனர்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி, மாவட்ட முதன்மை நீதிபதி இளங்கோவன் உள்ளிட்டோர் சுவாமி தரிசித்தனர். காலை 10 மணியளவில், வீரராகவபெருமாள் வீதியுலா நடைபெற்றது.

பூந்தமல்லி அருகே திருமழிசை யில் உள்ள திருமழிசை ஆழ்வார் கோயில், ஜெகநாதபெருமாள் கோயில் மற்றும் திருநின்றவூர் பக்தவத்சல பெருமாள் கோயில் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பெருமாள் கோயில்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

SCROLL FOR NEXT