பாரம்பரியமிக்க ஆந்திராவின் பங்கனப்பள்ளி மாம்பழத்துக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
பழங்களின் அரசன் என புகழப்படும் பங்கனப்பள்ளி மாம்பழம், ஆந்திராவில் கர்னூல் மற்றும் ராயலசீமா மாவட்டங் களில் அதிகமாக விளைகின்றன. ஆந்திராவில் மட்டுமே மொத்தம் 7 லட்சத்து 68 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய குடும்பத்தினர் மற்றும் வியாபாரிகள் பங்கனப் பள்ளி மாம்பழத்தை நம்பியுள்ள னர். ஒவ்வொரு ஆண்டும் 24.35 லட்சம் மெட்ரிக் டன் பங்கனப் பள்ளி மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்பட்டு, அதில் 5 ஆயிரத்து 500 டன்கள் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனையாகும் பங்கனப்பள்ளி மாம்பழங்களுக்கு புவிசார் குறியீடு கோரி ஆந்திராவின் தோட்டக் கலைத்துறை ஆணையரான ஐஏஎஸ் அதிகாரி ராணி குமுதினி ஆந்திர அரசு சார்பில் விண்ணப் பித்திருந்தார். இந்த விண்ணப் பத்தை பரிசீலித்த சென்னை புவிசார் குறீயீட்டுக்கான பதிவாளர் ஓ.பி.குப்தா, பங்கனப்பள்ளி மாம்பழத்துக்கு நேற்று புவிசார் குறீயீட்டுக்கான சான்றிதழை வழங்கி உத்தரவிட்டார். பங்கனப்பள்ளி மாம்பழத்துக்கு பெனிசான், சப்பட்டை என பிற பெயர்களும் உண்டு.