கோடை விடுமுறை முடிந்து அனைத்துப் பள்ளிகளும் இன்று (புதன்கிழமை) திறக்கப்படுகின்றன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளி திறக்கும் முதல் நாளன்றே பாடப் புத்தகங்களும், நோட்டுகளும் வழங்க ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது.
ஆண்டுதோறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு வருடாந்திர தேர்வுகள் முடிவடைந்து ஏப்ரல் 3-வது வாரத்தில் கோடை விடுமுறை விடப்படும். தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு மே 1 முதல் விடுமுறை விடுவார்கள். ஆனால், இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் மிகவும் கடுமையாக இருந்ததால் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு முன்கூட்டியே வருடாந்திர தேர்வுகள் நடத்தப்பட்டு ஏப்ரல் இறுதி வாரத்திலேயே கோடை விடுமுறை விடப்பட்டன. உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு வழக்கம்போல் ஏப்ரல் 3-வது வாரத்தில் விடப்பட்டது.
கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்ததால் பள்ளிகள் திறக்கும் தேதி ஜூன் 7-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. மே மாதம் முடிந்து ஜூன் மாதம் தொடங்கிவிட்ட நிலையிலும் வெயிலின் தாக்கம் குறையவில்லை. இதனால், பள்ளிகள் திறக்கும் தேதி மேலும் தள்ளிப்போகுமா என்று மாணவர்களும், பெற்றோர்களும் எதிர்பார்த்தனர். ஆனால், பள்ளிகள் திட்டமிட்டபடி, ஜூன் 7-ம் தேதிக்கு திறக்கப்படும் என்றும் மாவட்டத்தில் நிலவும் வெப்பத்துக்கு ஏற்ப பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்கும் முடிவை அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே முடிவு செய்து அறிவிக்கலாம் என்றும் பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் அனுமதி வழங்கினார்.
இந்த நிலையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, கோடை விடுமுறை முடிந்து அனைத்துப் பள்ளிகளும் இன்று (புதன்கிழமை) திறக்கப்படுகின்றன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளி திறக்கும் முதல் நாளன்றே பாடப் புத்தகங்களும், நோட்டுகளும் வழங்க பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. திட்டமிட்டபடி, சென்னை மாவட்டத்திலும் அனைத்து பள்ளிகளும் விடுமுறை முடிந்து புதன்கிழமை திறக்கப்படுவதாக மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி எஸ்.மார்க்ஸ் தெரிவித்தார்.
மாநகராட்சிப் பள்ளிகள்
சென்னை மாநகராட்சி கட்டுப் பாட்டில் இயங்கும் 281 பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து இன்று (புதன்கிழமை) திறக்கப்படும் என்று பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
பள்ளி தொடங்கும் நாளில் மகிழ்ச்சி யான சூழ்நிலையை உருவாக்கும் பொருட்டு, பள்ளிகளில் வாழைக் கன்று, பலூன் மற்றும் மாவிலை தோரணம் கட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இனிப்புகள், எழுது பொருள்கள் மற்றும் புத்தகங்களும் வழங்கப்படவுள்ளது.
திருவள்ளூர் ஆட்சியர் சுந்தரவல்லி, காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா ஆகியோரும் தங்கள் மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளும் இன்று திறக்கப்படும் என அறிவித் துள்ளனர்.