கல்குவாரிகளில் இருந்து தினமும் 30 மில்லியன் லிட்டர் குடிநீர் கிடைப்பதால், ஏரிகளில் இருந்து எடுக்கப்படும் குடிநீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டு விட்ட நிலையில், கடைமட்டத்தில் மிச்சமுள்ள நீரும் எடுக்கப்பட்டு, விநியோகம் செய் யப்பட்டு வருகிறது. வறட்சியை சமாளிக்க மாற்று நீராதாரங்களைத் தேடிய சென்னை குடிநீர் வாரியம், சென்னை புறநகரில், சிக்கராயபுரம் பகுதியில் உள்ள 22 கல் குவாரிகளில் தேங்கியுள்ள நீரைச் சுத்திகரித்து, குடிநீராக விநி யோகிக்கும் திட்டத்தை கடந்த ஜூன் 9-ம் தேதி முதல் செயல்படுத்தி வருகிறது. அங்கிருந்து தினமும் 30 மில்லியன் லிட்டர் நீர் கிடைத்து வருகிறது.
இந்நிலையில் ஏரிகளில் இருக் கும் நீரைச் சேமிக்கும் விதமாக, அங்கிருந்து எடுக்கப்படும் நீரின் அளவை சென்னை குடிநீர் வாரியம் குறைத்துள்ளது.
இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர் கூறும்போது, “கடந்த 8-ம் தேதி நிலவரப்படி, பூண்டி, செங்குன்றம், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளில் இருந்து விநாடிக்கு 122 கனஅடி நீர், குடிநீர் விநியோகத்துக்காக திறக்கப்பட்டு வந்தது. தற்போது ஏரியில் இருந்து குடிநீருக்காக எடுக்கப்படும் குடிநீரின் அளவை குறைத்திருக்கிறோம். நேற்றைய நிலவரப்படி, விநாடிக்கு 91 கனஅடி குடிநீர் எடுக்கப்பட்டது” என்றார்.