தமிழகம்

சேலம் பேருந்து நிலையத்தில் நகைச்சுவை நடிகரை கடத்தி நகை, பணம் பறிப்பு: புகார் வாங்க போலீஸ் அலைக்கழிப்பு

செய்திப்பிரிவு

சேலத்தில் நகைச்சுவை நடிகரை ஆட்டோவில் கடத்திச் சென்று நகை, பணம், அலைபேசியை பறித்தவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

சென்னை போரூர் பகுதியைச் சேர்ந்தவர் நகைச்சுவை நடிகர் கொட்டாச்சி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள் ளிட்ட 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். கோவை அருகே நடந்த படப் பிடிப்பில் கலந்து கொண்ட இவர் தனது பிறந்த நாளை குடும்பத் தினருடன் கொண்டாடுவதற்காக நேற்று முன்தினம் இரவு கோவையில் இருந்து சேலத்துக்கு பேருந்தில் புறப்பட்டு இரவு ஒரு மணியளவில் சேலம் புதிய பேருந்து நிலையம் வந்தார்.

அப்போது, சென்னைக்கு செல் லும் சொகுசுப் பேருந்து நிற்கும் இடம் குறித்து, ஆட்டோ ஓட்டுநரிடம் விசாரித்துள்ளார். ஆட்டோவில் ஓட்டுநருடன் இருவர் இருந்தனர். தனியார் சொகுசுப் பேருந்து நிற்கும் இடத்துக்கு அழைத்து செல்வதாகக் கூறி கொட்டாச்சியை ஆட்டோவில் அவர்கள் அழைத்துச் சென்றனர்.

ஆனால், ஆட்டோ நீண்ட தூரம் சென்றதால், சந்தேகம் அடைந்த கொட்டாச்சி, இதுகுறித்து ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்டார். அப்போது, ஆட்டோவில் இருந்த இருவரும், கொட்டாச்சியை தாக்கி, அவர் வைத்திருந்த அலைபேசி, இரண்டு பவுன் சங்கிலி மற்றும் பணத்தை பறித்தனர். பின்னர், சேலம் குரங்குச்சாவடி பகுதியில் அவரை இறக்கி விட்டு சென்றனர்.

அந்த வழியாக வந்த சிலரிடம் கொட்டாச்சி உதவி கேட்டு, சேலத்தில் உள்ள சக நடிகரான பெஞ்சமினுக்கு தகவல் கொடுத்து சம்பவ இடத்துக்கு அழைத்தார். இதுகுறித்து பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்ய சென்றார். அப்போது, சம்பவ இடம் சூரமங்கலம் காவல் நிலைய எல்லைக்குள் வருவதால் அங்கு புகார் செய்யுமாறு போலீஸார் தெரிவித்தனர்.

சூரமங்கலம் காவல் நிலையத் தில் புகார் செய்ய கொட்டாச்சி சென்றபோது, ஆட்டோவில் ஏறிய இடம் புதிய பேருந்து நிலையம் என்பதால், பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்யுமாறு அனுப்பி வைத்தனர். நீண்ட இழுபறிக்கு பின்னர் மதியம் ஒரு மணிக்கு புகாரை சூரமங்கலம் போலீஸார் பெற்றுக்கொண்டு மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

SCROLL FOR NEXT