தமிழகம்

மாற்றுத்திறனாளிகள் மீது அதிக அக்கறை கொண்டவர் ஜெ.- அமைச்சர் சரோஜா புகழாரம்

செய்திப்பிரிவு

மாற்றுத்திறனாளிகள் மீது அதிக அக்கறை கொண்டவராக ஜெயலலிதா இருந்தார் என்று சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா புகழாரம் சூட்டியுள்ளார்.

வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:

''மாற்றுத்திறனாளிகள் மீது அதிக அக்கறை கொண்டவராக ஜெயலலிதா இருந்தார்.

மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.1000 உதவித்தொகை போதாது என்று கூறி அப்போதைய முதல்வர் ஜெயலலிதா ரூ.1500 ஆக உயர்த்தி உத்தரவிட்டார். இதற்காக மட்டும் அப்போது ரூ.238.18 கோடி ஒதுக்கப்பட்டது. இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமே இந்த தொகை வழங்கப்படுகிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்ட முயற்சிகளால்தான் தமிழக அரசுக்கு 2013-14ஆம் ஆண்டுக்கான மாற்றுத் திறனாளிகளுக்கான சிறந்த செயல்திறன் மிக்க மாநிலம் என்ற விருது கிடைத்தது.

தமிழக அரசு மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அவர்களுக்கான பாதுகாப்புமிக்க மாநிலமாகத் திகழ்கிறது.

தமிழகத்தில் 11,79,000 மாற்றுத்திறனாளிகள் இருக்கின்றனர். உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டவர்கள் தவிர, கண், காது, எலும்பு, சதை பாதிப்புகளும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றுக்கான உபகரணங்கள் மற்றும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இரு கால்களும் செயலிழந்தவர்கள் தவிர தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்கள், மூளை பாதிப்பு, ஆட்டிசம், மனநலம் பாதிக்கப்பட்டோருக்கும் நலத்திட்ட உதவிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மைய நீரோட்டத்துக்கு மாற்றுத் திறனாளிகளை விரைவில் அழைத்து வருவோம்''.

இவ்வாறு அமைச்சர் சரோஜா கூறினார்.

SCROLL FOR NEXT