தமிழகம்

9 கிலோ தங்கம் பதுக்கிய இளைஞர் கைது: மதுரையில் அதிகாரிகள் நடவடிக்கை

செய்திப்பிரிவு

மதுரையில் 9 கிலோ தங்கத்தை பதுக்கி வைத்திருந்த இளைஞரை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். மதுரை அண்ணாநகரைச் சேர்ந்தவர் ஜமாலுதீன் மகன் ஜன்னத்துல் பிர்தவுஸ் (22). பட்டதாரி இளைஞர்.

வெளிநாட்டிலிருந்து கடத்திவரப்பட்ட தங்கக் கட்டிகள் இவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தூத்துக்குடியிலுள்ள மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் முதுநிலை விசாரணை அதிகாரி சந்திரபோஸ் தலைமையிலான குழுவினர் மதுரை வந்து, அண்ணாநகரிலுள்ள ஜன்னத்துல் பிர்தவுஸ் வீட்டுக்குள் புகுந்து சோதனை நடத்தினர்.

சுமார் 2 மணி நேரத்துக்கும் மேல் நடைபெற்ற இந்த சோதனையின்போது, வீட்டுக்குள் இருந்து ஒருவரையும் வெளியே அனுமதிக்கவில்லை. அப்போது உள்ளே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 9.046 கிலோ எடை கொண்ட 20 தங்கக் கட்டிகளைப் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.2.40 கோடி எனத் தெரியவந்தது. இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், ஜன்னத்துல் பிர்தவுஸை கைது செய்து மதுரை மாவட்ட கூடுதல் தலைமை குற்றவியல் நீதிபதி ஜெயக்குமார் முன் ஆஜர்படுத்தினர். அவரை 14-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து அவரை மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். இதுபற்றி மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கூறும்போது, இலங்கையில் இருந்து படகு வழியாக தமிழகத்துக்கு கடத்திவரப்படும் தங்கம், மதுரையிலுள்ள ஒருவரிடம் அளிக்கப்படுவதாக தகவல் கிடைத்தது. அதுபற்றி விசாரித்தபோது ஜன்னத்துல் பிர்தவுஸ் என்பவருக்கு கடத்தல்காரர்களுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவரை கைது செய்து 9.046 கிலோ எடை கொண்ட தங்கத்தை பறிமுதல் செய்துள்ளோம். இவருடன் தொடர்பு வைத்துள்ள கடத்தல் கும்பலைக் கைது செய்வதற்கான பணிகளை முடுக்கி விட்டுள்ளோம் என்றனர்.

SCROLL FOR NEXT