பெரம்பலூர் அருகே டிப்பர் லாரி மீது கார் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர்.
சென்னை ஆவடியைச் சேர்ந்த ஜேம்ஸ்ராஜன்(50), அவரது மனைவி மகாலட்சுமி(44), ஜேம்ஸ்ராஜனின் தம்பி சவரிராஜன்(45), அவரது மனைவி ஜூலி(40) மற்றும் ஜேம்ஸ்ராஜனின் சகோதரி ஷர்மிளா ஆகியோர் ஒரு காரில் நேற்று சென்னையில் இருந்து தஞ்சாவூருக்கு புறப்பட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே உறவினர் வீட்டு துக்க நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இவர்கள் பயணித்த காரை சவரிராஜன் ஓட்டி வந்தார். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரம் அருகே வந்தபோது முன்னால் சென்றுகொண்டிருந்த ஒரு டிப்பர் லாரி திடீரென திரும்பியதில், லாரியின் பக்கவாட்டுப் பகுதியில் கார் மோதியது.
இதில், காரில் பயணித்த சவரிராஜன், ஜேம்ஸ்ராஜன் ஆகி யோர் படுகாயமடைந்து அந்த இடத்திலேயே இறந்தனர். பெரம்பலூர் அரசு மருத்துவ மனைக்குக் கொண்டுசெல்லும் வழியில் மகாலட்சுமி இறந்தார். ஜூலி, ஷர்மிளா ஆகியோர் பெரம்பலூர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் தொடர்பாக அரியலூர் மாவட்டம் செந்துறையைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் அலெக்ஸ் பாண்டியன் என்பவரை கைது செய்த மங்களமேடு போலீஸார், வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.