ரியல் எஸ்டேட் தொழில் தொடர்பாக ஒரு ஒருங்கிணைந்த திட்டத்தை அரசு உருவாக்கும் வரை விளைநிலங்களை வீட்டு மனைகளாக மாற்ற விதிக்கப்பட்ட தடை தொடரும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில், ‘‘தமிழகம் முழுவதும் விவசாய விளைநிலங்கள் எல்லாம் சட்டவிரோத வீட்டு மனைகளாக மாற்றப்படுகிறது. இதனால் விவசாயம் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. எனவே விளைநிலங்களை வீட்டு மனைகளாக மாற்ற தடை விதிக்க வேண்டும்’’ என கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, அங்கீகாரமற்ற வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்ய தடை விதித்து கடந்த 2016 செப்டம்பர் மாதம் உத்தரவிட்டனர்.
அதன்பிறகு, ‘‘2016 அக்.20-ம் தேதிக்கு முன்பாக விற்பனை செய்யப்பட்ட அங்கீகாரமற்ற வீட்டு மனைகளை, மறு விற்பனை செய்யலாம் என்றும், ஆனால் அதன்பிறகு விளைநிலங்களை சட்ட விரோத வீட்டு மனைகளாக மாற்றி விற்பனை செய்தால், அதை பத்திரப் பதிவு செய்வதற்கு விதிக்கப்பட்ட தடை அமலில் இருக்கும்’’ என அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
ஆனால் அரசின் இந்த அரசாணையை ஏற்க மறுத்த நீதிபதிகள், தரிசு மற்றும் விளைநிலங்களை முறையாக வகைப்படுத்தியும், சட்டவிரோத வீட்டு மனைகளை வரையறை செய்வது குறித்தும் ஒருங்கிணைந்த திட்டத்தை உருவாக்கி அதை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
ஒவ்வொரு முறையும் இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, இந்த விஷயத்தில் அரசு ஒரு நல்ல முடிவை எடுக்கும் வரை தடையை நீக்க முடியாது எனக்கூறி அப்போது தலைமை நீதிபதியாக இருந்த எஸ்.கே.கவுல் உறுதியாக இருந்தார். இதனால் கடந்த 6 மாதமாக ரியல் எஸ்டேட் தொழில் தமிழகத்தில் நசிந்து விட்டதாகவும், ஆகவே தடையை நீக்க வேண்டும் எனவும் கோரி பல மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை நேற்று தலைமை நீதிபதி (பொறுப்பு) ஹூலுவாடி ஜி.ரமேஷ் மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில் நடந்தது.
அப்போது ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ‘‘பத்திரப்பதிவிற்கு விதிக்கப்பட்ட தடையால் கடந்த 6 மாதங்களாக வீட்டுமனைகளை விற்பனை செய்ய முடியாமல் ரியல் எஸ்டேட் உரிமையாளர்களும், நிலங்களை வாங்கிய பொதுமக்கள் அதை விற்க முடியாமலும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அரசுக்கு உயர் நீதிமன்றம் ஒரு காலக்கெடு விதித்து அதற்குள் ஒருங்கிணைந்த திட்டத்தை உருவாக்க உத்தரவிட வேண்டும்’’ என்றனர்.
அதற்கு தலைமை நீதிபதி, ‘‘இந்த விவகாரத்தில் இப்போதே ஒரு நல்ல முடிவினை எடுத்து விடலாம்’’ என்றார். இதையடுத்து, ரியல் எஸ்டேட் தரப்பு வழக்கறிஞர்கள், ‘‘ கடந்த செப்டம்பர் முதல் இப்போது வரை தமிழகத்தில் 3 முதல்வர்கள் வந்துவிட்டனர். ஆனால் அரசு இந்த விஷயத்தில் முடிவு எடுக் காமல் காலம் தாழ்த்துகிறது’’ என்றனர்.
அப்போது நீதிபதி ஆர்.மகாதேவன் குறுக்கிட்டு, ‘‘ இந்த விஷயத்தில் தமிழக அரசு ஒரு ஒருங்கிணைந்த திட்டத்தை உருவாக்கி அறிக்கையாக தாக்கல் செய்யவேண்டும் என ஏற்கனவே உத்தரவிட்டும் ஏன் இதுவரை அதை தாக்கல் செய்யவில்லை? அந்த திட்டத்தை அரசு விரைவாக தாக்கல் செய்தால் மட்டுமே அதை பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க முடியும். அதுவரை பத்திரப்பதிவுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும்’’ என்றார்.
இதையடுத்து, வழக்கு விசாரணையை வரும் மார்ச் 28-ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், ‘‘அதற்குள் தமிழக அரசு ஒருங்கிணைந்த திட்டத்தை உருவாக்கி அந்த அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும்’’ என உத்தரவிட்டனர்.