தமிழகத்தில் உத்தேச மின் கட்டண உயர்வை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதி மன்றம், கட்டண உயர்வு தொடர் பான முடிவு இவ்வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக மூத்த வழக்கறிஞர் ஆர்.காந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக மக்கள் தங்களது கருத்துகளை தெரி விக்கும்படி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தனது இணையதளத்தில் பொது அறிவிக்கை வெளியிட்டது. தமிழ் நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் பதவிக்கு நீதித் துறையைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டும் என்று கோரும் வழக்கு உச்சநீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் நிலுவை யில் உள்ளன. இந்த நிலை யில், மின்கட்டணத்தை உயர்த்து வதற்கான நடவடிக்கையை தமிழ் நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தாமாகவே மேற்கொள் வது சட்டத்துக்கு எதிரானது ஆகும்.
தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத் தலைவர் நியமனம் குறித்த வழக்கு நிலு வையில் இருக்கும்போது, உத்தேச மின்கட்டண உயர்வு அமல் படுத்தப்பட்டால், மேற்கண்ட தலைவர் நியமன முறைக்கு எதிராக தீர்ப்பு வந்தால், மின் கட்டண உயர்வை திரும்பப் பெற முடியாத நிலை ஏற்படும். அதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட நேரிடும்.
டெல்லியில் உள்ள மின்சாரத் துக்கான மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் கடந்த மாதம் 18 மற்றும் 27-ம் தேதிகளில் பிறப்பித்த உத்தரவுகள், மின்கட்டண நிர்ணய முறையையே மாற்றியுள்ளது. இந்த உத்தரவு பற்றி தெரிந்து கொண்டு மக்கள் தங்கள் கருத்து களை தெரிவிக்கும் முன்னரே, சென்னை மற்றும் திருநெல்வேலி யில் உத்தேச மின்கட்டண உயர்வு குறித்து மக்கள் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப் பட்டுள்ளன.
இந்த நிலை தொடர்ந் தால், மின்சாரத்திற்கான மேல் முறையீட்டுத் தீர்ப்பாய உத்தரவை மீறியதோடு மட்டுமல்லாமல் நீதி பரிபாலனத்தையே கேலிக்குரிய தாக்குவது போலாகும். எனவே, வரும் 13-ம் தேதி மின்கட்டண உயர்வு குறித்து உத்தரவு வெளியிட தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்ச் முன்பு இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், ‘‘இந்த மனுமீது தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைவர் மூன்று வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு மனுதாரர் தனது பதில் மனுவை 2 வாரத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும். மின் கட்டண உயர்வு தொடர்பான முடிவு, இவ்வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது. வழக்கு விசாரணை டிசம்பர் 16-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது’’ என்று உத்தரவிட்டனர்.