ஐஆர்சிடிசி இணையதளத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கான சேவை கட்டணம் ரத்து செய்யப் பட்டதால், டிக்கெட் முன்பதிவு செய்வோரின் எண்ணிக்கை 6.30 லட்சமாக அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘மக்களிடம் செல்போன்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால் புதிய தொழில்நுட்பம் மூலம் ரயில்வே துறை பல்வேறு வசதிகளை செய்து வருகிறது. குறிப்பாக, பயணிகள் வரிசையில் நிற்பதைத் தவிர்க்கவும், இணைய தளத்தில் டிக்கெட் முன்பதிவை ஊக்கப்படுத்தவும் சிலீப்பர் டிக்கெட்டுக்கு ரூ.20-ம், ஏசி வகுப்புக்கு ரூ.40-ம் என இருந்த சேவைக் கட்டணம் கடந்த ஆண்டு நவம்பரில் ரத்து செய்யப் பட்டது.
இதனால், கடந்த சில மாதங் களாக ஐஆர்சிடிசி இணைய தளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சேவை கட்டணம் வசூலித்தபோது தினமும் சுமார் 5.50 லட்சம் பேர் டிக்கெட் முன்பதிவு செய்தனர். இப்போது இந்த எண்ணிக்கை 6.30 லட்சமாக அதிகரித்துள்ளது’’ என்றார்.