குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் 90 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் நடத்திய போராட்டம் தீவிரமடைந்தது. அது மாநிலம் தழுவிய போராட்டமாக மாறியது. சென்னை மெரினா கடற்கரையில் திரண்ட லட்சக்கணக்கான மாணவர்களும் இளைஞர்களும் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தை உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் வெற்றிகரமாக நடத்தினர். கடந்த 17-ம் தேதி காலை சுமார் 25 பேருடன் தொடங்கிய போராட்டத்தில் அடுத்தடுத்த நாட்களில் 10 லட்சம் பேர் வரை திரண்டனர். பொதுமக்களும் குடும்பத்தோடு பங்கேற்றனர். ஜல்லிக்கட்டுக்கு சட்டப்பேரவையில் நிரந்தர சட்டம் இயற்றப்பட்டதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் போராட்டம் முடிவுக்கு வந்தது.
சென்னையில் கடந்த 23-ம் தேதி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர போலீஸார் முயன்ற போது, வன்முறை வெடித்தது. ஐஸ்அவுஸ் காவல் நிலையத்துக்கு தீ வைக்கப்பட்டது. பல இடங்களில் கல்வீச்சு, வாகனங்கள் எரிப்பு உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்களும் நடந்தன. வன்முறை சம்பவங்கள் நடந்த பகுதிகளில் போலீஸார் குவிக்கப்பட்டு, தற்போது அமைதி திரும்பியுள்ளது.
இந்நிலையில், தமிழக அரசு சார்பில் குடியரசு தினவிழா இன்று கோலாகலமாக கொண்டாடப் படுகிறது. மெரினாவில் நடக்கும் விழாவில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார். விழாவையொட்டி தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை டிஜிபி டி.கே.ராஜேந்திரன் செய்துள்ளார். அனைத்து மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட எஸ்.பி.க்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
மாணவர்கள் போராட்டம் முடிந்து அமைதி திரும்பியுள்ள நிலையில், குடியரசு தினத்தன்று அசம்பாவித சம்பவங்கள் எதுவும் மீண்டும் நடந்து விடக்கூடாது என்பதில் போலீஸார் உறுதியாக உள்ளனர். அதற்காக தமிழகம் முழுவதும் 90 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சென்னையில் பாதுகாப்பு
சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலை தொடர்ந்து நேற்று 4-வது நாளாக சீல் வைக்கப்பட்டு வாகனங்கள் எதுவும் செல்ல அனுமதிக்கப்படவில்லை. மாநகர காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் தலைமையில் கூடுதல் டிஜிபிக்கள் ராஜேஷ் தாஸ், கரன் சின்கா, சைலேந்திரபாபு, ஜெயந்த் முரளி ஆகியோர் சட்டம் – ஒழுங்கை கண்காணிக்க கூடுதல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மெரினா கடற்கரை, விவேகானந்தர் இல்லம் பகுதியில் பாதுகாப்புப் பணிகளை ராஜேஷ் தாஸ் மேற்கொண்டுள்ளார். மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட திருமங்கலம் காவல் நிலைய எல்லைப் பகுதியில் கரன் சின்காவும், வடக்கு மண்டலத்தில் பூக்கடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இடங்களில் சைலேந்திரபாபுவும், தெற்கு மண்டலத்தில் வடபழனி பகுதியில் ஜெயந்த் முரளியும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் தவிர 10 ஐ.ஜி.க்களுக்கும் தனித்தனியாக பணி ஒதுக்கப்பட்டுள்ளது. ஐ.ஜி.க்கள் பெரியய்யா, சுமித்சரண், சந்திப்ராய் ரத்தோர் ஆகியோர் கிழக்கு மண்டலத்திலும், டேவிட்சன் தேவாசீர்வாதம், ஜெயராம் ஆகியோர் தெற்கு மண்டலத்திலும், சாரங்கன், அயூஷ் மணி திவாரி வடக்கு மண்டலத்திலும், மகேஷ் குமார் அகர்வால், தினகரன் ஆகியோர் மேற்கு மண்டலத்திலும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஐ.ஜி. கருணாசாகர், போக்குவரத்து மற்றும் விஐபிக்கள் வரும் பாதையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்.
பாண்டியன், பிரகாஷ் மீனா, ராஜேஸ்வரி, ஜெயலட்சுமி, நாகஜோதி,தேவராணி, தீபா கனிக்கர், செந்தில் குமாரி, சாமுண்டீஸ்வரி, காமினி, செந்தில்,மல்லிகா, நிஷா பார்த்திபன் ஆகிய 13 போலீஸ் சூப்பிரண்டுகளும் சென்னை மாநகரம் முழுவதும் பல்வேறு இடங்களில் பாதுகாப்புப் பணிக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். சென்னை நகரில் மட்டும் சுமார் 20 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.