தமிழகத்துக்கு மண்ணெண்ணெய் ஒதுக்கீடு கணிசமாகக் குறைக்கப்பட்டிருப்பதை பொதுமக்கள் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையிலும், நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு கோரும் நோக்கத்துடனும் ரேஷன் கடைகளில் அதிமுகவினர் அறிவிப்புப் பலகைகளை வைத்துள்ளனர்.
ஏழை, எளிய மக்களின் பயன்பாட்டுக்காக மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசு மானிய விலையில் மண்ணெண்ணெய் வாங்கி விநியோகித்து வருகிறது. தமிழகத்துக்கு மாதாந்திர மண்ணெண்ணெய் தேவை 65,140 கிலோ லிட்டர். இந்த அளவை மத்திய அரசு குறைத்துக் கொண்டே வருகிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, 1-6-2011, 25-5-2012, 10-6-2012, 9-4-2013 ஆகிய தேதிகளில் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்றபோது (2011 மே மாதம்) வழங்கப்பட்ட அளவான 52,806 கிலோ லிட்டர் மண்ணெண்ணெயாவது வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆனால், மத்திய அரசு 52,806 கிலோ லிட்டரில் இருந்து 44,576 கிலோ லிட்டராகவும், பின்னர் 42,460 கிலோ லிட்டராகவும், அதன்பிறகு 39,429 கிலோ லிட்டராகவும் குறைத்தது. இப்போது 29,060 கிலோ லிட்டர்தான் வழங்குகிறது.
சமையல் எரிவாயு இணைப்பு எண்ணிக்கை அதிகரிக்கும்போதெல்லாம் அதற்கேற்ப மண்ணெண்ணெய் அளவு குறைக்கப்படும். இந்த நடைமுறை அனைத்து மாநிலங்களிலும் பின்பற்றப்படுவதாக மத்திய அரசு விளக்கம் சொல்கிறது.
ஆனால், தமிழ்நாட்டை விட அதிக எண்ணிக்கையில் சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்ட சில மாநிலங்களில் மண்ணெண்ணெய் ஒதுக்கீ்ட்டு அளவு குறைக்கப்படவில்லை என்றும் தமிழகத்துக்கான மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை மட்டும் மத்திய அரசு வேண்டுமென்றே குறைத்துக் கொடுக்கிறது என்றும் முதல்வர் ஜெயலலிதா கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.
இதனைத் தேர்தல் பிரச்சாரத்துக்காக அதிமுகவினர் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். மத்திய அரசின் மண்ணெண்ணெய் குறைப்பு நடவடிக்கை நியாயம்தானா என்று கேட்டு ரேஷன் கடைகள் முன்பு அறிவிப்புப் பலகைகளை வைக்கிறார்கள்.
சென்னை புரசைவாக்கம் வெங்கடேசன் தெருவில் உள்ள ரேஷன் கடை முன்பு, வடசென்னை தெற்கு மாவட்டம், எழும்பூர் பகுதி அதிமுகவினர் அறிவிப்புப் பலகை ஒன்றை வைத்துள்ளனர்.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள் இடம்பெற்றுள்ள அதில், தமிழக மக்களை தொடர்ந்து வஞ்சிக்கும் மத்திய காங்கிரஸ் ஆட்சியின் கொடுமை பாரீர்! பாரீர்!
தமிழகத்துக்குத் தேவையான மண்ணெண்ணெய் அளவு 65,140 கிலோ லிட்டர், தற்போது மத்திய அரசு வழங்குவதோ 29,060 கிலோ லிட்டர், நியாயம்தானா? நியாயம் தானா? பொதுமக்களே சிந்திப்பீர்! என்று கொட்டை எழுத்துகளில் எழுதப்பட்டுள்ளது.
அண்மையில், அமைச்சர்கள் மற்றும் அதிமுக பிரமுகர்களின் இல்லத் திருமணங்களில் கலந்துகொண்டு முதல்வர் ஜெயலலிதா பேசும்போது, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளிலும் அதிமுக மகத்தான வெற்றி பெற கட்சித் தொண்டர்கள் அரும்பாடுபட்டு களப்பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார். அதனால் கட்சித் தொண்டர்களும், நாளையும் நமதே, நாற்பதும் நமதே என்ற முழக்கத்துடன் களப்பணியாற்றத் தொடங்கிவிட்டனர். அதன் ஒரு பகுதியாக காங்கிரஸ் அரசுக்கு எதிரான பிரச்சாரத்தை, மக்கள் தவறாமல் வந்து செல்லும் ரேஷன் கடைகளில் இருந்து தொடங்கியுள்ளனர்.