தமிழகம்

நிலத்தடி நீரை வணிக நோக்கில் உறிஞ்சினால் நடவடிக்கை: சென்னை குடிநீர் வாரியம் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

சென்னை மாநகரப் பகுதியில் வணிக நோக்கத்துக்காக நிலத்தடி நீரை உறிஞ்சினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை குடிநீர் வாரியம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய் திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை குடிநீர் வாரிய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வீட்டு உபயோகம் தவிர, வணிக அடிப்படையில் நிலத்தடி நீரை உறிஞ்சவோ, உரிய அனுமதியின்றி லாரி மூலம் ஓரிடத்திலிருந்து, வேறு இடத்துக்கு எடுத்துச் செல்லவோ கூடாது என்று குடிநீர் வாரிய ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை குடிநீர் வாரிய குழாய்கள் மூலம் விநியோகம் செய்யப்படும் குடிநீரை சிலர் மோட்டார் மூலம் உறிஞ்சுவதாக வந்த புகார்களை அடுத்து, அந்தந்த பகுதிகளில் சோதனையிடுமாறு, வாரியத்தின் மேலாண் இயக்குநர் வி.அருண்ராய் அறிவுறுத்தியிருந்தார்.

அதன்படி, சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள், புளியந்தோப்பு, நேரு நகர், முதல் தெருவில் சோதனை நடத்தியபோது, அங்கு வசிக்கும் ஒரு நபர், சென்னை குடிநீர் வாரிய அனுமதி பெறாமல் நிலத்தடி நீரை அவருடைய வீட்டிலுள்ள 2 கிணறுகளில் இருந்து எடுத்து 30 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் கேன்களில் அடைத்து விற்பனை செய்தது கண்டறியப்பட்டது. அதனால் நிலத்தடி நீரை உறிஞ்ச பயன்படுத்திய மின் மோட்டார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு யாரேனும், வணிக நோக்கில் நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை செய்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT