இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு புதுச்சேரியில் வரும் மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த மாநாட்டின் முக்கியத்துவம் குறித்து, சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநில நிர்வாகக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சியின் பொதுச் செயலாளர் எஸ்.சுதாகர் ரெட்டி, தேசிய செயலாளர் டி.ராஜா ஆகியோர் ‘தி இந்து’வுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது:
இந்தியாவில் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு நடக்கவிருக்கும் இந்த அகில இந்திய மாநாடு முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனென்றால், இது ஆட்சி மாற்றம் மட்டுமல்ல. இந்தியாவில் பண்பு ரீதியான மாற்றம் நிகழ்ந்துள்ளது. இந்திய வரலாற்றில் இதுவரை பிரதமர், குடியரசு தலைவரை தவிர வேறு யாரும் அரசு ஊடகத்தில் தேசத்துக்காக உரையாற்றியதில்லை.
ஆனால், முதல் முறையாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தசரா பண்டிகையின் போது உரையாற்றினார். அரசு இயந்திரங்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றன. அரசியல், கலாச்சாரம், வரலாறு என எல்லா தளங்களிலும் ஆர்.எஸ்.எஸ்-ன் ஊடுருவல் உள்ளது. இது மதச்சார்பற்ற ஜன நாயக குடியரசுக்கு ஆபத்தாகும்.
இந்த ஆபத்தை எப்படி எதிர்கொள்வது என்று அகில இந்திய மாநாட்டில் விவாதிக்கப்படும். வலது சாரிகளை எதிர்த்தப் போராட்டத்தில் கட்சிகளை ஒருங்கிணைக்கும் போது, மதச்சார்பின்மை கொள்கையை கடைப்பிடிக்கும் கட்சிகள் எல்லாவற்றையும் சேர்த்துக் கொள்ள முடியாது. பொருளாதாரக் கொள்கைகளிலும் ஒத்தக் கருத்துக் கொண்ட கட்சிகளோடு மட்டுமே எதிர் காலத்தில் இணைந்து பணியாற்ற முடியும்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ் மீது மக்களுக்கு இருந்த வெறுப்பினால், அவர்கள் தோற்றுவிட்டார்கள். ஆனால், இடதுசாரிகளும் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளனர். இது மிக முக்கிய பிரச்சினையாகும். இடதுசாரிகள் தங்களை மீண்டும் உயிர்ப்பித்து, மறு சீரமைத்துக் கொள்ள வேண்டும். அரசு கொள்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு, வருங்காலங்களில், இந்திய அரசியலில் இடதுசாரிகளுக் கான தனி அடையாளத்தை ஏற்படுத் துவோம்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஒன்றிணைய வேண்டும் என்ற விருப்பத்தை ஏற்கெனவே கூறியிருக்கிறோம்.
இரு கட்சிகளுக்கும் பெரும் பாலான விஷயங்களில் ஒத்த கருத்து உள்ள போது, ஏன் இரு கட்சி களும் இணையக் கூடாது என்ற கேள்வியை வரலாறு எங்கள் முன் வைக்கும். அப்போது அதற்கு பதில் கிடைக்கும்.