அம்பத்தூரில் ஒரு வீட்டிலிருந்து திருடிச் சென்ற நகையை மீண்டும் அதே வீட்டுக்குள் திருடன் வைத்து சென்ற சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அம்பத்தூர் தெற்கு பிரதான சாலையில் வசிப்பவர் ஆறுமுகம்(50). இவரது மனைவி மகேஸ்வரி (42). இவர்களின் மகன் மோகன்பாபு (22). கடந்த 30-ம் தேதி காலையில் ஆறுமுகம் தனது தையல் கடைக்கும், மகேஸ்வரி மேல்மருவத்தூர் கோயிலுக்கும், மோகன்பாபு வழக்கம்போல வேலைக்கும் சென்று விட்டனர். அன்று மாலை வேலை முடிந்து வீடு திரும்பிய ஆறுமுகம், வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 6 பவுன் நகைகள் திருடப்பட்டு இருந்தன.
இதுகுறித்து அம்பத்தூர் காவல் நிலையத்தில் ஆறுமுகம் புகார் கொடுத்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலையில் ஆறுமுகம் வீட்டின் முன்பு முடிச்சு போட்ட ஒரு கைக்குட்டை கிடந்தது. இதை ஆறுமுகத்தின் மனைவி மகேஸ்வரி எடுத்து, திறந்தபோது, திருடப்பட்ட 6 பவுன் நகைகளும் அதில் இருந்தன. அதோடு ஒரு கடிதமும் இருந்தது. அதில், ‘ஆசையில் தெரியாமல் திருடிவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள்’ என்று எழுதப்பட்டு இருந்தது. இதைப் பார்த்து மகேஸ்வரி மகிழ்ச்சி அடைந்தார்.
ஆறுமுகம் அம்பத்தூர் காவல் நிலையம் சென்று இதுகுறித்து தகவல் தெரிவித்தார். இதைக் கேட்டு போலீஸாரும் ஆச்சரியம் அடைந்தனர்.