மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை உளவுத் துறையினர் தீவிர கண்காணிப்பில் வைத்திருப்ப தாக மதிமுக வட்டாரத்திலிருந்து புகார் கிளம்பியிருக்கிறது. அதிமுகவினரே அதிசயித்துப் போகுமளவுக்கு அந்தக் கட்சிக்கு வக்காலத்து வாங்கியவர் வைகோ. ஆனால், அரசியல் சூழலால் அண்மைக்காலமாக அதிமுக முகாமைவிட்டு ஒதுங்க ஆரம்பித்திருக்கிறார். இதனால், “அங்கே போகக்கூடாது.. இங்கே போகக்கூடாது” என வைகோவுக்கு ஏகப்பட்ட நெருக்கடிகளை கொடுத்து வருகிறது தமிழக போலீஸ்!
அதிரடி தாக்குதல்
இதையடுத்து தமிழக அரசை வறுத்தெடுக்க ஆரம்பித்திருக்கிறார் வைகோ. இதன் உச்சபட்சமாக, அண்மையில் கொளத்தூர் மணி கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த வைகோ, ‘அதிமுக அரசின் எதேச்சதிகார அடக்குமுறை’ என்று கடுமையான வார்த்தைகளை பிரயோகித்தார். அன்று இரவே இன்னொரு காட்டமான அறிக்கையை விடுவித்த வைகோ, “அ.தி.மு.க. அரசின் பாசிச முகத்திரை கிழிந்தது. ஈழத்தமிழர்களுக்கு எதிராக, குறிப்பாக விடுதலைப்புலிகளுக்கு எதிராக கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராக கடந்த காலத்தில் சர்வாதிகார பொடா அடக்குமுறையை ஏவிய முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழக மக்களை ஏமாற்றுவதற்காக ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு என்று ஒரு கபட நாடகத்தை நடத்தினார்” என்று அதிரடி தாக்குதல் நடத்தினார்.
இதுகுறித்து மதிமுக வட்டாரத்திலிருந்து நம்மிடம் பேசியவர்கள், “பாஜக, தேமுதிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளை உள்ளடக்கி புதிய வெற்றிக் கூட்டணியை உருவாக்குவதற்கு வைகோ சில முயற்சிகளை எடுத்துவருகிறார். இது ஆளும் தரப்புக்கு பிடிக்கவில்லை. இதனால், அவர் மீது சிறுகச் சிறுக அடக்குமுறைகளை ஏவிவிடுகிறார்கள். குறிப்பாக உளவுத் துறையினர் வைகோவை முடக்கிப் போடுவதிலேயே குறியாய் இருக்கிறார்கள்.
போலீஸ் முட்டுக்கட்டை
தூத்துக்குடி கட்டபொம்மன் விழாவுக்கு விருதுநகரில் இருந்த வைகோவை போகவிடாமல் தடுத்தது போலீஸ். கிராமங்களில் வைகோ மேற்கொண்டுவரும் மறுமலர்ச்சிப் பிரசாரப் பயணத்துக்கும் போலீஸ் தரப்பிலிருந்து ஏகப்பட்ட முட்டுக்கட்டைகள். இதையெல்லாம் மனதில் வைத்துதான், ’திமுக ஆட்சியில் ஜாபர் சேட்டுகள் இருந்ததுபோல் இந்த ஆட்சியிலும் சில ஜாபர்சேட்டுகள் இருக்கிறார்கள்’ என தலைவர் வைகோ பகிரங்கமாகவே பேசினார்.
சேலம் மத்தியச் சிறைச்சாலைக்கு கொளத்தூர் மணியைப் பார்ப்பதற்காக செவ்வாய்க்கிழமை வைகோ சென்றிருந்தபோது, சிறைக் கண்காணிப்பாளர் அறைக்கே வந்த உளவுத் துறையினர், ‘நீங்கள் கொளத்தூர் மணியிடம் பத்து நிமிடங்கள்தான் பேசவேண்டும்’ என கட்டளை போட்டார்கள். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த வைகோ, ‘இதைச் சொல்ல உங்களுக்கு என்ன ரைட்ஸ் இருக்கு?’ என்று பொங்கித் தீர்த்துவிட்டார்.
கண்காணிப்பில் வைகோ!
“வைகோவின் செயல்பாடுகள், அலைபேசி தொடர்புகள் உள்ளிட்டவைகளை மாத்திரமின்றி, மதிமுக முக்கிய நிர்வாகிகளின் நடவடிக்கைகளும் அலைபேசி தொடர்புகளும் கண்காணிக்கப்படுகின்றன. உளவுத்துறையின் சதியால் விரைவிலேயே வைகோ ஏதாவதொரு வழக்கில் கைது செய்யப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. வாய்ப்பேச்சை வைத்து இதைச் சொல்லவில்லை. நம்பத்தகுந்த தகவல்கள் வந்திருப்பதால்தான் சொல்கிறோம்’’ என்கிறார்கள்.