தமிழகத்தில் மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்தினாலும், விற்பனை செய்யும் பொறுப்பு தனியாரிடம் வழங்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக, மணல் விலை அதிகமாக இருந்தது. இதற்கிடையே, இதற்கு மேல் மணல் அள்ள முடியாது என்ற நிலையில் 10 குவாரிகள் கைவிடப்பட்டன. அதற்கு பதிலாக புதிய மணல் குவாரிகள் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டதால், தமிழகத்தில் கடும் மணல் தட்டுப்பாடு நிலவுகிறது. 1 லோடு மணல் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை விற்கப்படுவதால், ஆற்று மணலுக்கு மாற்றாக செயற்கை மணல் (எம். சேன்ட்) பயன்பாடு அதிகரித்தது.
இதனால் அதன் விலையும் அதிகரித்தது. ஒரு யூனிட் வெறும் 2 ஆயிரம் ரூபாய்க்குள் இருந்த செயற்கை மணல் தற்போது 3,500 ரூபாயாக உயர்ந்துவிட்டது. கட்டுமான நிறுவனத்தினர் அதற்கும் மாற்று கண்டுபிடித்திருக்கிறார்கள். செம் மண் போல சிகப்பு நிறத்தில் உள்ள மண லை(?) வெளிமாவட்டங்களில் இருந்து கொண்டுவந்து கட்டுமானத்துக்கு பயன் படுத்தத் தொடங்கியுள்ளனர்.
மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இந்த மண் பயன்பாடு அதிகளவில் உள்ளது.அரசு கட்டிடங்களுக்கு வேறு வழியின்றி இந்த மண்ணையே பயன்படுத்துகின்றனர். உதாரணமாக, மதுரை ஒத்தக் கடையில் உள்ள விவசாயக் கல்லூரியைச் சுற்றி சுமார் முக்கால் கிலோ மீட்டர் தூரம் காம்பவுண்ட் சுவர் கட்டும் பணிக்கு இந்த மணல் பயன் படுத்தப்படுகிறது.
இதுகுறித்து பொறியாளர் ஒருவரிடம் கேட்டபோது, “தமிழகத்தில் கடந்த 10 ஆண்டாக விலை உயரவே உயராத ஒரு பொருள் என்றால் அது ஆற்று மணல் தான். 2008 முதல் இன்று வரையில் இரண்டு யூனிட் மணல் விலை 625 ரூபாய் தான். அரசு நிர்ணயித்த விலையில் தான் மாற்றமில்லை. ஆனால், இடையில் சிலர் அதனை பல ஆயிரம் ரூபாய்க்கு விற்று லாபம் பார்க்கிறார்கள். வெளிமாநிலங்களுக்கும் கடத்தப்படுகிறது. இதனால் உள்ளூரில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே வேறு வழியில்லாமல் இந்த சிகப்பு மணலை பயன்படுத்துகிறோம். இந்த மண் கமுதி வழியாக மதுரைக்கு கொண்டு வரப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தேரிகளில் இயற்கையாகவே, இதுபோன்ற மண் கிடைக்கிறது. அங்கி ருந்து தான் வருகிறதா என்று உறுதியாகத் தெரியவில்லை.
பார்ப்பதற்கு மணல் போல இருப் பதால் இதனை கட்டுமானத்துக்கு பயன்படுத்துகிறோம். இது வரையில் இதுபோன்ற மணலை கட்டுமானத்துக்கு பயன்படுத்தியது இல்லை. உப்புச்சத்துள்ள மண்ணைத்தான் கட்டுமானத்துக்கு பயன் படுத்தக்கூடாது. இதை பயன்படுத்தினால் பாதிப்பிருக்காது என்று நம்புகிறோம்” என்றார்.
தென்மாவட்டத்தில் மணல் குவாரிக்கு அரசு அனுமதி இல்லை. விவசாயத்திற்கு மண் எடுப்பதற்கே ஆயிரத்தெட்டு சட்டச் சிக்கல்கள் இருக்கின்றன.
இந்த மண் கட்டுமானத்துக்காக பல நூறு லாரிகளில் எடுத்து வரப்படுவது எவ்வாறு, அதிகாரிகள் அதனை எப்படி அனுமதித்தார்கள் என்ற கேள்வி எழுந்து ள்ளது.