சசிகலா பொதுச் செயலாளரானது முதல் தமிழக முதல்வராக முயற்சி செய்தது, அவரது தரப்பினர் மீது எம்எல்ஏ கடத்தல் வழக்கு பாய்ந்தது வரை அதிமுகவில் நடந்த அடுத்தடுத்த அனைத்து திருப்பங்கள், நிகழ்வுகளுக்கும் மதுரை மாவட்ட உள்ளூர் அரசியலே முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா, அதிமுக பொதுச் செயலாளராக வேண்டும் என்ற முதல் குரல் மதுரை மாவட்டத்தில் இருந்துதான் எதிரொலித்தது. புறநகர் மாவட்டச் செயலாளர் எம்எல்ஏ வி.வி.ராஜன் செல்லப்பா, மாவட்ட செயற்குழு கூட்டத்தை திருப்பரங்குன்றத்தில் கூட்டி முதல் மாவட்டமாக சசிகலா பொதுச் செயலாளராக வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினார். இவரை தொடர்ந்து மாநகர் மாவட்டச் செயலாளர் செல்லூர் கே.ராஜூவும், தீர்மானம் நிறைவேற்றினார். அதன்பிறகு மதுரை மாவட்டத்தைபின்பற்றியே மற்ற மாவட்டங்களில் சசிகலா பொதுச்செயலாளராக மாவட்ட செயலாளர்கள், அணி நிர்வாகிகளும் இதுபோல் தீர்மானங்கள் நிறைவேற்றி நேரில் சென்று வலியுறுத்தியதால் சசிகலா தற்காலிக பொதுச் செயலாளராக பொறுப்பேற்றார்.
அதன்பிறகு, மதுரை திருமங்கலம் தொகுதி எம்எல்ஏவும், வருவாய்துறை அமைச்சருமான ஆர்.பி.உதய குமார், கட்சியும், ஆட்சியும் ஒரே நபரிடம் இருக்க வேண்டும், சசிகலா முதலமைச்சராக வேண்டும் என்றார். முதலமைச்சராக பன்னீர் செல்வம் இருந்தபோது, ஆர்.பி.உதயகுமாரின் இந்த குரல் கட்சியில் மட்டுமின்றி, அமைச்சர்கள், பொதுமக்கள், அரசியல் பார்வையாளர்களிடம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து, இவரை பின்பற்றி மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை, மற்ற அமைச்சர்களும் தங்கள் பதவிகளை காப்பாற்ற சசிகலா முதலமைச்சராக வேண்டும் என குரலெழுப்பி ஓ.பன்னீர் செல்வத் திற்கு நெருக்கடி கொடுத்தனர்.
அதனால், ஓ.பன்னீர் செல்வம் முதல்மைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அதிமுகவில் ஓ.பன்னீர் செல்வத்திற்கும், சசிகலாவுக்கும் விரிசல் ஏற்பட முதலமைச்சர் குரலே முக்கிய நிகழ்வாகிவிட்டன. இதைத்தொடர்ந்து அதிமுகவில் கண்ணை மூடி திறப்பதற்குள் கடந்த 7 நாளில் பல்வேறு அரசியல் நிகழ்வுகள் அடுத்தடுத்து நடந்துவிட்டன.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் காலை உச்சநீதிமன்றத்தில் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறைதண்டனையும். ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.
அப்போது சசிகலா அணி எம்எல்ஏ-க்கள் தங்க வைக்கப்பட்டிருந்த கூவத்தூர் ரிசார்ட்டில் இருந்து தப்பி வந்த மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன், நேற்று முன்தினம் சசிகலா, தற்போது சட்டசபை குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் மீது போலீஸில் தன்னை கடத்தி சென்றதாக புகார் செய்தார். இவரது புகாரின் பேரில் தற்போது சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இது முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கும், சசிகலாவுக்கும் எந்த நேரத்திலும் சிக்கலை ஏற்படுத்தலாம்.
இதுகுறித்து மதுரை மாவட்ட அதிமுகவினர் கூறுகையில்,
சோழவந்தான் எம்எல்ஏ மாணிக்கம், ஓ.பன்னீர் செல்வம் மூலமே சீட் பெற்றார். அதனால், அவர் பக்கம் சென்றார். அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், முன்னாள் மேயர் ராஜன செல்லப்பா ஆகியோரின் உள்ளூர் அரசியலால் எம்.பி., கோபாலகிருஷ்ணனும் ஓ.பன்னீர் செல்வம் பக்கம் சென்றதில் ஆச்சரியம் இல்லை. ஆனால், தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன் சென்றது மட்டுமில்லாது சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி மீது கடத்தல் புகார் தெரிவிக்கும் அளவுக்கு சென்றது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. சரவணன், அடாவடி அரசியல் செய்பவர் இல்லை. படித்தவர். அவரிடம் இந்த துணிச்சல் எப்படி வந்தது என்று தெரியவில்லை. அவர் தப்பி வந்ததாக கூறியதால் அவரை வைத்து புகார் தெரிவிக்க வைத்தால் சசிகலா முகாமிற்கு சிக்கலை ஏற்படுத்தலாம் என ஓ.பன்னீர் செல்வம் அணியினர் நினைத்து இருக்கலாம். சரவணன், இதற்கு முன் ஓ.பன்னீர் செல்வத்திற்கு நெருக்கமானவர் கூட இல்லை. தற்போது சரவணனின் பின்னணியையும், அவரது தொடர்புகளையும் சசிகலா அணியினர் தீவிரமாக விசாரிக்கத் தொடங்கியுள்ளனர். மதுரை மாவட்ட அதிமுகவில் பெரியளவில் வெளியே தெரியாத சரவணன், சசிகலா மீது புகார் தெரிவித்தபிறகு ஒரே நாளில் தமிழக அரசியலில் பிரபலமடைந்துள்ளார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார். செல்லூர் கே.ராஜூ, ராஜன் செல்லப்பா எதிர்எதிர் துருவங்கள். இவர்கள் மூவரும் சசிகலாவிடம் விசுவாசத்தை காட்டி பதவிகளை தக்கவைக்க மேற்கொண்ட உள்ளூர் அரசியலே, அதிமுகவில் நிகழ்ந்த அடுத்தடுத்த திருப்பங்களுக்கு முக்கிய காரணம் எனக்கூறப்படுகிறது.