சுதந்திரப் போராட்டத்தில் கொடியை கீழேவிடாமல் தன்னுயிரைவிட உயர்வாக மதித்து உயிர் நீத்த திருப்பூர் கொடிகாத்த குமரனின் 110-வது பிறந்தநாள் திருப்பூரில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
திருப்பூர் குமரன் பூங்காவில் உள்ள குமரனின் சிலைக்கு வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம் ஆனந்தன் மாலை அணிவித்து பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்ற குமரன் பிறந்தநாள் தேசியக்கொடி பேரணியை தொடங்கிவைத்தார். இப்பேரணி திருப்பூர் குமரன் நினைவுப் பூங்காவில் தொடங்கி காமாட்சியம்மன் திருமண மண்டபத்தில் நிறைவுபெற்றது. பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த பிரமுகர்களும் குமரன் பிறந்தநாளை கொண்டாடினர்.
திருப்பூர் குமரன் பிறந்த சொந்த ஊரான சென்னிமலையில் இருந்து பேருந்துகளில் வந்திருந்து மரியாதை செலுத்தினர். திருப்பூர் குமரனின் குடும்பத்தொழில் நெசவு என்றபோதிலும் பிழைப்புத் தேடி ஈரோடு சென்று அதன் பின் இறுதியாக திருப்பூர் வந்தடைந்தார்.
காந்தியடிகளின் தீவிர பக்தரான குமரன் கதராடை அணிந்தே வாழ்ந்தார். மகாத்மா காந்தி சட்டமறுப்பு இயக்கத்துக்கு அழைப்பு விடுத்ததை யடுத்து, 'போராட்டத்தில் பங்கெடுத்த குமரன் வந்தேமாதரம் என்று முழக்க மிட்டபடி சென்றபோது ஆங்கிலேய காவலர்கள் கொடியை பறிக்க முற்பட்டனர். காவலர்களின் தாக்குதலுக் குள்ளாகி ரத்தம் கொட்டியபோதும் அவர் தம் கரங்களில் இருந்த கொ டியை கீழே விடவில்லை. இதனாலேயே அவர் 'கொடிகாத்த குமரன்' என்று பெயர்பெற்றார்.
"திருப்பூர் குமரனின் தியாகத்தை போற்றும் வகையில் தமிழக அரசே இவர் பிறந்தநாள் விழாவை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என்பதும் அவருக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்பதும் எங்களின் பல ஆண்டு கோரிக்கை" என்கிறார் தியாகி திருப்பூர் குமரன் அறக்கட்டளையின் செயலாளர் வேலுச்சாமி.
திருப்பூர் மாநகரின் புஷ்பா ரவுண்டானா பகுதியில் ஆளுயர வெண்கலச் சிலை நிறுவ வேண்டும் என்பதும் திருப்பூர்வாசிகளின் நீண்ட நாள் கோரிக்கையாகவே இருக்கிறது. தியாகி திருப்பூர் குமரன் வாழ்ந்த வீடு சென்னிமலையில் உள்ளது. அந்த வீடும் பராமரிக்கப்படாமல் மிகவும் சிதிலமடைந்துள்ளது. ஒரு தியாகியின் வரலாற்றுப் பதிவுகளை கூட பாதுகாக்க முடியாத நிலையில் இருப்பதை தமிழக அரசு கவனிக்குமா?
திருப்பூர் குமரன் பூங்காவில் இருந்து புறப்பட்ட பேரணியை வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம் ஆனந்தன் தொடங்கிவைத்தார்.