தமிழகம்

மருமகள் மீது வெந்நீர் ஊற்றிய மாமியார் கைது: இருவரையும் சமாளிக்க முடியாமல் இளைஞர் தற்கொலை

செய்திப்பிரிவு

தி.நகரில் மருமகள் மீது வெந்நீர் ஊற்றிய மாமியாரை போலீஸார் கைது செய்தனர். தாயும்-மனைவியும் சண்டை போட்டதால் கவலையடைந்த இளைஞர் ரயில் முன் விழுந்து தற்கொலை செய்துகொண்டார்.

சென்னை தி.நகர் மேட்லி சாலை 2-வது தெருவை சேர்ந்தவர் சாகுல்ஹமீது. எம்.பி.ஏ. பட்டதாரி. முன்னணி இளம் நடிகர் ஒருவரிடம் அக்கவுன்டன்டாக பணியாற்றினார். பின்னர் அந்த வேலையை விட்டுவிட்டு கால் டாக்சி டிரைவராக வேலை செய்தார். கடந்த மார்ச் மாதம் சாகுல்ஹமீதுக்கும், திண்டிவனத்தை சேர்ந்த ஷாகின் என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. சாகுல்ஹமீதின் தாயார் நிஷாவும் இவர்களுடனேயே வசித்துவந்தார்.

இந்நிலையில் நிஷாவுக்கும், ஷாகினுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இவர்களுக்கு இடையேயான சண்டையை சமாதானப்படுத்துவதே சாகுல்ஹமீதுக்கு பெரிய பிரச்சினையாகிவிட்டது. நேற்று முன்தினம் மாலையில் நிஷாவுக்கும், ஷாகினுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நிஷா, அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த வெந்நீரை எடுத்து ஷாகின் மீது ஊற்றினார். இதில் ஷாகினின் உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டன. அருகே இருந்தவர்கள் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மருத்துவமனையில் இருந்து வந்த புகாரை தொடர்ந்து மாம்பலம் காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி அங்கு சென்று விசாரணை நடத்தினார். மேலும் வீட்டிலிருந்த நிஷாவை கைதுசெய்து காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தார். விசாரணை நடத்துவதற்காக சாகுல்ஹமீதை தேடியபோது அவர் தலைமறைவானது தெரிந்தது.

திருமணமாகி 8 மாதங்களே ஆகியிருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஷாகினிடம் மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தினார். அப்போது மாமியார் நிஷா மீது பல குற்றச்சாட்டுகளை கூறினார் ஷாகின்.

அதைத் தொடர்ந்து சாகுல்ஹமீது, நிஷா ஆகியோர் மீது பெண் வன்கொடுமை, கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. நிஷா கைது செய்யப்பட்ட நிலையில், சாகுல்ஹமீதை கைது செய்ய போலீஸார் தேடிவந்தனர்.

இந்நிலையில் எழும்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தில் நேற்று காலையில் இளைஞர் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். போலீஸார் நடத்திய விசாரணையில் அவர் சாகுல்ஹமீது என்பது தெரிந்தது. தாயும், மனைவியும் தொடர்ந்து சண்டை போட்டதால் அமைதி இழந்த சாகுல்ஹமீது ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது.

மாமியார்-மருமகள் சண்டை தற்காலிகமானது

இதுகுறித்து மனநல மருத்துவர் லட்சுமி கூறுகையில், "மாமியார், மருமகள் சண்டை என்பது தற்காலிகமான ஒன்று. இருவரும் அதிகாரத்தை நிலைநாட்ட நினைப்பதால்தான் பிரச்சினைகள் அதிகமாகின்றன. சேர்ந்து வாழும்போது பிரச்சினைகள் வருவது சகஜம்தான் என்பதை இருவரும் உணர வேண்டும். பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர பிரச்சினைக்கு காரணமானவர்களில் ஒருவர் நினைத்தால்கூட முடியும். ஆனால் இருவரும் அதை செய்வதில்லை. மருமகள் தவறு செய்தால் அதை அவரிடமோ, அவரது பெற்றோரிடமோ பக்குவமாக கூறலாம். மாமியார்-மருமகள் என்றாலே சண்டைதான் போடுவார்கள் என்ற நமது எண்ணத்தை முதலில் மாற்ற வேண்டும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கத் தொடங்கினாலே அனைத்து பிரச்சினைகளும் முடிந்துவிடும்.

மனைவியுடன் தாய்க்கும் பிரச்சினை ஏற்பட்டால் அதை மகனால் மிக எளிதாக தீர்க்க முடியும். ஆனால் பெரும்பாலானவர்கள் பிரச்சினையை தீர்க்க முயற்சி செய்யாமல் ஒதுங்கிச் செல்ல நினைக்கின்றனர்" என்றார்.

SCROLL FOR NEXT