தமிழகம்

ஜெயலலிதாவுடன் முதல்வர் உள்பட 15 அமைச்சர்கள் சந்திப்பு: கட்சித் தேர்தல் தொடர்பாக முக்கிய ஆலோசனை

செய்திப்பிரிவு

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் 14 அமைச்சர்கள், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து கட்சியின் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.

அதிமுகவின் உள் கட்சித் தேர்தலை வரும் டிசம்பருக்குள் முடித்து, தேர்தல் ஆணையத்துக்கு உரிய விவரங்களை அளிக்க வேண்டும். இதற்கான பணிகளை அதிமுக நிர்வாகிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும் மாவட்ட ரீதியாக நிர்வாகிகளை அழைத்து, தலைமைக் கழக நிர்வாகிகள் கடந்த இரு தினங்களாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், எடப்பாடி பழனிச்சாமி, வைத்திலிங்கம், சண்முகநாதன், ராஜேந்திர பாலாஜி உள்பட மொத்தம் 15 அமைச்சர்கள், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை நேற்று மாலை போயஸ் தோட்டம் இல்லத்தில் சந்தித்துப் பேசினர். மாலை 4 மணி முதல் சுமார் இரண்டரை மணி நேரம் இந்த ஆலோசனை நடந்தது.

இதுகுறித்து அதிமுக வட்டாரத்தில் விசாரித்தபோது, கட்சியின் தேர்தலை நடத்துவது குறித்தும், அரசின் செயல்பாடுகள் குறித்தும் பல்வேறு ஆலோசனைகளை ஜெயலலிதா வழங்கியதாகத் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT