தமிழகம்

ஜல்லிக்கட்டு அவசர சட்டமே நிரந்தரத் தீர்வுதான்: முதல்வர் ஓபிஎஸ் பேட்டி

செய்திப்பிரிவு

அவசர சட்டம் பற்றி அச்சப்படத் தேவையில்லை. ஜல்லிக்கட்டு அவசர சட்டமே நிரந்தரத் தீர்வுதான் என்று முதல்வர் ஓபிஎஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் முதல்வர் ஓபிஎஸ் கூறியதாவது:

தமிழக அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் ஜல்லிக்கட்டுக்கான தடைகள் நீங்கியுள்ளது என்பதை மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்கிறேன்.

அவசர சட்டம் பற்றி அச்சப்படத் தேவையில்லை. ஜல்லிக்கட்டு அவசர சட்டம் 6 மாதத்துக்கு நடைமுறையில் இருக்கும்.

தமிழகம் முழுவதும் நாளை ஜல்லிக்கட்டு நடைபெறும். அலங்காநல்லூரில் நானே ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைக்க இருக்கிறேன்.

ஜல்லிக்கட்டுக்காக போராடுபவர்கள் நிரந்தரத் தீர்வு வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதுவே நிரந்தர தீர்வுதான். இந்த அவசர சட்டத்துக்கு மாற்றாக வரும் 23-ம் தேதி தொடங்கும் சட்டப்பேரவை கூட்டத் தொடரிலேயே சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றப்படும்.

ஜல்லிக்கட்டைப் பொறுத்தவரையில் அவசர சட்டமே நிரந்தர தீர்வுதான். அறவழியில் போராடிய இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும், மக்களுக்கும் நன்றி'' என்று முதல்வர் ஓபிஎஸ் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT