திருத்தி அமைக்கப்பட்ட மாநில காங்கிரஸ் கமிட்டியில் வாசனுக்கு 25, தங்கபாலுக்கு 9, சிதம்பரத்துக்கு 8, இளங்கோவனுக்கு 6 என மாவட்டத் தலைவர் பதவிகள் பங்கு பிரிக்கப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
கட்சிக்கு இள ரத்தம் பாய்ச்சுவதாகச் சொல்லிக் கிளம்பிய ராகுல் காந்தி, ’இரண்டு முறைக்கு மேல் பதவியில் இருந்தவர்களுக்கு (தொடர்ந்து ஆறு ஆண்டுகள்) மீண்டும் பதவி இல்லை. அவர்களுக்குப் பதிலாக இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும்’என்று அறிவித்தார். இதெல்லாம் தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் பட்டியல் தேர்வில் கண்டு கொள்ளப்படவில்லை. மாவட்டத் தலைவர்கள் ஏழு பேர் உள்ளிட்ட பல பொறுப்பாளர்கள் தொடர்ந்து இரண்டு முறைக்கு மேல் பதவியில் இருந்தவர்கள். இதில் ஒரு சிலர் பத்தாண்டுகளுக்கும் மேலாக பதவியில் நீடிப்பவர்கள். புதி தாக பதவிக்கு வந்திருப்போரில் பெரும் பாலானோர் மணிவிழா கண்ட மாமணிகள்!
வாசன் பிடிவாதம்
இதுகுறித்து ’தி இந்து’விடம் பேசிய காங்கிரஸ் பொறுப்பாளர்கள் சிலர், ’’புதிய நிர்வாகிகளில் மூன்றில் இரண்டு பங்கு தனது ஆதரவாளர்களாக இருக்க வேண்டும் என்பது வாசனின் பிடிவாதம். இதனாலேயே பட்டியல் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. முகுல் வாஸ்னிக்கை இரண்டு முறை தனது அலுவலகத்துக்கே வரவழைத்துப் பேசினார் சிதம்பரம். வாசனும் வாஸ்னிக்கின் அலுவலகத்துக்கே சென்றுவிட்டார்.
இப்போது வெளிவந்திருக்கும் பட்டியலில் வாசன் கைதான் ஓங்கி இருக்கிறது. அதேநேரம், இத்தனை நாளும் வாசனுக்கு பின்னால் நின்ற முக்கிய தளபதிகள் பலரை ஓரங்கட்டி இருப்பது வாசனுக்கு சரிவுதான். ’மீண்டும் த.மா.கா’ அஸ்திரத்தை கையில் எடுத்துவிடக் கூடாது என்பதற்காக, வாசன் ஆதரவாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருந்தாலும் அவருக்கு பக்கபலமான ஆட்களை தந்திரமாக ஓரங்கட்டி இருக்கிறது தலைமை. தேர்தலில் விஜயகாந்தை எதிர்த்து நின்ற விழுப்புரம் மாவட்டச் செயலாளர் சிவராஜ், சென்னை முனவர் பாஷா, முன்னாள் எம்.பி.க்கள் ராம்பாபு, உடையப்பன் உள்ளிட்டவர்களுக்குக்கூட வாசன் அணியில் பதவிகள் இல்லையே” என்கிறார்கள்.
“சிதம்பரமாவது நினைத்ததை சாதித்தாரா?’’ என்று கேட்டதற்கு, ’’புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் புஷ்பராஜுக்கு மீண்டும் மாவட்டத் தலைவர் பதவியையும் மாநில துணைத் தலைவர் பதவியையும் வாங்கிக் கொடுத்திருக்கும் சிதம்பரம், திருச்சி சுஜாதா, எம்.பி.க்கள் விஸ்வநாதன், கே.எஸ்.அழகிரி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், கே.ஆர்.ராமசாமி, வள்ளல்பெருமான், சுந்தரம் மற்றும் சேலம் சதாசிவலிங்கம், ஜி.கே.தாஸ், வானமாமலை உள்ளிட்டவர்களை மாநில நிர்வாகிகளாக்கி இருக்கிறார். அதேசமயம், கார்த்தி சிதம்பரத்துக்கு மாநில துணைத் தலைவர் பதவிக்கு அடிபோட்டார்கள். அது நடக்கவில்லை. கார்த்தியின் ஆதரவாளரான சிவகங்கை மாவட்டத் தலைவர் ராஜரத்தினத்தை பதவியிலிருந்து தூக்கியதுடன் செல்வப்பெருந்தகை, கராத்தே தியாகராஜன் உள்ளிட்டவர்களையும் ஒதுக்கிவிட்டார்கள்” என்கிறார்கள் அந்த நிர்வாகிகள்.
வாசனுக்கு 25, சிதம்பரத்துக்கு 8, இளங்கோவனுக்கு 6, தங்கபாலுவுக்கு 9 என மாவட்டத் தலைவர் பதவிகளை இப்படி பங்கு வைத்துக் கொடுத்திருக்கிறார்கள். இந்த அணிகள் இல்லாமல் மாநிலப் பட்டியலில் இடம்பிடித்திருக்கும் திருநாவுக்கரசரும் தனது விசுவாசிகளான அரிமளம் சுந்தர்ராஜன், கணபதி, நாசே ராமச்சந்திரன் உள்ளிட்ட ஏழு பேரை லிஸ்டில் ஏற்றி இருக்கிறார். மத்திய இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் தனது மகன் ஜெயசிம்ம நாச்சியப்பனை பொதுச் செயலாளராக்கி இருக்கிறார்.
யார் இந்த ரவிச்சந்திரன்?
இதற்கிடையில் இன்னொரு கூத்தும் நடந்திருக்கிறது. மதுரை வடக்கு மாவட்டத் தலைவர் பதவிக்கு ரவிச்சந்திரன் என்பவரை அறிவித்திருக்கிறார்கள். ’அது நான் தான்’என்கிறார் சிதம்பரம் ஆதரவாளரான மேலூர் ரவிச்சந்திரன். மாணிக்க தாகூரின் மாமனாரும் வாசன் ஆதரவாளருமான ரவிச்சந்திரனோ ’நானே அது’ என்கிறார். ஞானதேசிகன் இதை எப்படிச் சமாளிக்கிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.