திமுக சார்பில் நீர்நிலைகள் தூர்வாரும் பணி குறித்து அதிமுகவினர் தவறாக விமர்சிக்கின்றனர். அதுபற்றி நாங்கள் கவலைப்படவில்லை என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள வையாபுரி குளம் திமுக சார்பில் முழுமையாக தூர்வாரப்பட்டுள்ளது. இந்தக் குளத்தை ஸ்டாலின் நேற்று பார்வையிட்டார். அப்போது குளத்தின் கரையில் மரக்கன்றுகளை நட்டார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
நீர்நிலைகளை தூர்வாரும் பணிகளை முறையாக செய்து வருகிறோம். இதை அதிமுகவினர் தவறாக விமர்சிக்கின்றனர். அதுபற்றி நாங்கள் கவலைப்படவில்லை.
சட்டப்பேரவையில் நடந்த விவாதத்தின்போது நீர்நிலைகளை தூர்வாரும் பணிகள் குறித்து திமுக உறுப்பினர் பேசினார். அப்போது குறுக்கிட்ட முதல்வர், ‘மேட்டூர் அணை தூர்வாரும் பணிக்கு ரூ.300 கோடி ஒதுக்கி, பணிகள் நடைபெறுகின்றன’ என்று தெரிவித்தார். இதையடுத்து எங்கெல்லாம் பணிகள் நடக்கின்றன என துரைமுருகன் கேட்டார். அதற்கு பதில் சொல்ல முடியாத நிலையில் முதல்வர் இருக்கிறார்.
திமுக செய்யும் பணிகளை மூடி மறைக்கவும் பத்திரிகை விளம்பரங்களுக்காகவும்தான் குளங்கள் தூர்வாரப்படும் என அறிவித்தார்களே தவிர, பணிகள் நடைபெறவில்லை என்பதே உண்மை. இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.