சுற்றுச்சூழல் விதிமீறல்களை வரன் முறைப்படுத்தும் அதிகாரத்தை மாநில அரசுக்கே வழங்க வேண்டும் என மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனிடம் தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் வலியுறுத்தினார்.
தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், நேற்று டெல்லி சென்றார். அங்கு மத்திய அமைச்சர்களை சந்தித்துப் பேசினார். முதலில், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனை சந்தித்தார். அப் போது, சுற்றுச்சூழல் விதிமீறல்களை வரன்முறைப்படுத்தும் அதி காரத்தை மாநில அரசுக்கே வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
அதைத் தொடர்ந்து, மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார். தமிழகத்தில் தொழில் முதலீடுகள், மாநில தொழில் வளர்ச்சிப் பணிகள் குறித்தும், தொழில் அனுமதிகள் தொடர்பாகவும் அவருடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் எரிசக்தி, கனிமத்துறை அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து, தமிழகத்தில் கனிமம் மற்றும் சுரங்க சட்டங்களை அமல்படுத்துவது தொடர்பாகவும், சுரங்க உரிமங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தினார்.