ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்திட தமிழக மக்கள் குரலெழுப்பிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழுக் கூட்டம் 2017 ஜூன் 12-13 தேதிகளில் மத்தியக்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராசன், டி.கே. ரங்கராஜன், உ. வாசுகி, பி. சம்பத், அ. சவுந்தரராசன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இது தொடர்பாக இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட அறிக்கை:
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும்
தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட நீட் தேர்விலிருந்து விலக்களிக்கக் கோரும் மசோதாவிற்கு மத்திய அரசாங்கம் ஒப்புதல் அளிக்க மறுத்து வருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே. ரங்கராஜன் குடியரசுத் தலைவருக்கு இது தொடர்பாக எழுதிய கடிதத்திற்கு, அப்படி ஒரு மசோதா குடியரசுத் தலைவர் அலுவலகத்திற்கு வரவில்லை என செயலாளர் பதில் அளித்திருந்தார்.
ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட ஒரு மசோதா மீது அதிலும் குறிப்பாக தமிழகத்தில் லட்சக்கணக்கான மாணவர்களின் நலன் சம்பந்தப்பட்ட, அரசியல் சட்ட பொதுப்பட்டியலில் உள்ள ஒரு பிரச்சினையில் எந்த முடிவும் எடுக்காமல் மத்திய பாஜக அரசாங்கம் கிடப்பில் போட்டிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
தொடர்ச்சியாக தமிழக மக்களையும், தமிழக நலனையும் வஞ்சித்து வரும் மத்திய பாஜக அரசு இந்த பிரச்சினையில் அதே நிலையையே கடைபிடிக்கிறது. பாடத்திட்டத்தில் மாற்றம் இருக்கும் என்ற காரணத்தினால் கடந்த ஆண்டு விலக்களித்தது. கடந்த ஆண்டு +1 படித்த மாணவர்கள்தான் இந்த ஆண்டு +2 முடித்து மருத்துவக் கல்லூரிக்கு செல்லவிருப்பவர்கள்.
எனவே, தற்போதும் பாடத்திட்டத்தில் மாறுதல் உள்ள காரணத்தினால் கடந்த ஆண்டு விலக்களித்தது போல, இந்த ஆண்டும் விலக்களிக்க வேண்டிய குறைந்தபட்ச கடமை மத்திய அரசாங்கத்திற்கு உண்டு. தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள உட்கட்டமைப்பு வசதிகள் தமிழகத்தில் கடைபிடிக்கப்பட்டு வரும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 69 சதவிகித இடஒதுக்கீடு, அருந்ததியர் சமூகத்திற்கும், இஸ்லாமியர் பெண் மாணவியருக்கும் தற்போது உள்ள இடஒதுக்கீடு அனைத்தும் நீர்த்துப்போகச் செய்யும் இந்த நீட் தேர்வை முழுமையாக கைவிட வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
அதேநேரத்தில் கடந்த ஆண்டு கடைபிடித்த அதே அணுகுமுறையின் அடிப்படையில் இந்த ஆண்டிற்கும் நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்களிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது.
தமிழகத்தின் மிக முக்கியமான இந்த பிரச்சினையில் மாநில அரசு மவுனம் காப்பதும், கடிதம் எழுதுவதும், அடிக்கடி சந்தித்து வந்தோம் என்று கூறுவதும் எந்த வகையிலும் ஏற்கத்தக்கத்தல்ல. தமிழக மக்களின் ஒட்டுமொத்த மக்களின் உணர்வு என்கிற வலுவோடு தமிழக அரசு மத்திய அரசிடம் நீட் தேர்விலிருந்து விலக்கை வாதாடி பெற வேண்டும் இல்லையேல் போராடி பெற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.
பதவியை விற்கும் எம்.எல்.ஏ-க்கள்
ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற சசிகலா - எடப்பாடி பழனிசாமி பிரிவினரும், ஓ. பன்னீர் செல்வம் பிரிவினரும் சட்டப்பேரவை உறுப்பினர்களை தங்கள் பக்கம் இழுப்பதற்கு பல கோடி ரூபாய் வரை பணம் வழங்கியுள்ளதாக அப்போதே பரபரப்பான செய்திகள் வெளிவந்தன.
தற்போது சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு மேற்கண்ட இரு பிரிவினரும் தலா ரூ. 6 கோடி வரை பேரம் பேசப்பட்டதாகவும், ரூ. 2 கோடி பணம் கொடுக்கப்பட்டதாகவும், சில சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு ரூ. 10 கோடி வரை வழங்கப்பட்டதுடன் கிலோ கணக்கில் தங்கமும் கொடுக்கப்பட்டதாக அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் சரவணன் தெரிவித்த விபரம் ஊடகங்களில் வெளிவந்துள்ளன. இது தமிழக அரசியல் பண்பாட்டையே கேவலப்படுத்துவதாக அமைந்துள்ளது.
இந்த பணம் கைமாற்றலில் சில நூறு கோடி ரூபாய்கள் ஈடுபட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதிமுக அரசு ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி கொள்ளையடித்து பணம் குவித்துள்ளது தற்போது பகிரங்கமாக வெளிவந்துள்ளது. இதன் மூலம் அதிமுக என்றால் ஊழல் - முறைகேடு எனவும், ஊழல் முறைகேடு என்றால் அதிமுக என்பதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது குறித்து தற்போதும் இரண்டு பிரிவினரும் ஆட்சியதிகாரத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு கொள்ளை கலாச்சாரத்தை தொடருவதற்கு சகல முயற்சிகளும் ஈடுபட்டு வருகின்றனர்.
சட்டப்பேரவை உறுப்பினர் சரவணன் கூறியிருப்பது குறித்து ஆளுநர் உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.
இத்தகைய ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்திட தமிழக மக்கள் குரலெழுப்பிட வேண்டும்'' என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.