தமிழகம்

சென்னை புறநகர், உட்பகுதிகளில் சிறிய பேருந்துகள் இயக்கப்படுமா? - பொதுமக்கள் எதிர்பார்ப்பு

செய்திப்பிரிவு

போக்குவரத்து வசதிகள் அதிகம் இல்லாத புறநகர் மற்றும் உட்பகுதிகளில் சிறிய பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என பொது மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் 20 வழித் தடங்களில் புதிதாக 50 சிறிய பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவை பேருந்து, ஷேர் ஆட்டோ என எந்தப் போக்குவரத்து வசதியும் இல்லாத பகுதிகளில் வலம் வந்தாலும், இது போன்ற வழித்தடங்கள் சென்னையில் இன்னும் நிறைய உள்ளன.

அம்பத்தூர் ஓ.டி.-முருகப்பா பாலிடெக்னிக், மாதவரம்-ரெட்டேரி சந்திப்பு, மூலக்கடை-மணலி ஆகிய 3 வழித் தடங்களில் மட்டுமே வட சென்னையில் சிறிய பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நேரடியாக பேருந்தில் செல்ல முடியாத கொளத்தூரில் ஜி.கே.எம்.காலனி, வில்லிவாக்கம் ரயில் நிலையம், கொரட்டூர் அக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகளில் சிறிய பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்று அப்பகுதியினர் விரும்புகின்றனர்.

அதேபோன்று தென் சென்னையில் கூடுவாஞ்சேரி மற்றும் பெருங்களத்தூர் பகுதியில் ஆதனூர், ஆலப்பாக்கம், அகரம், படப்பை உள்ளிட்ட இடங்களுக்கும், நங்கநல்லூர் போன்ற உட்பகுதிகளுக்கும், துரைப்பாக்கம், கண்ணகி நகர் உள்ளிட்ட இடங்களுக்கும் சிறிய பேருந்துகள் இயக்கப்படுமா என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

பேருந்து வரும் நேரம் தெரியாததால் சிரமம்

பொதுவாக அரை மணி நேரத்துக்கு ஒரு பேருந்து என்றிருந்தாலும் இவை குறிப்பாக எந்த நேரத்துக்கு வருகிறது எனத் தெரிவதில்லை என்று மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ராஜகீழ்ப்பாக்கத்திலிருந்து எம்.ஐ.டி செல்லும் துர்கா கூறுகையில், “முதலில் 11.30க்கு இந்த பேருந்து வந்து கொண்டிருந்தது. ஆனால் நேற்று 11.50க்கு வந்தது. இன்று 12.15க்கு தான் வந்தது. இந்த வழித் தடத்தில் வேறு பேருந்து இல்லாததால் 45 நிமிடங்கள் வரை காத்திருந்தேன்” என்றார்.

மாடம்பாக்கத்தில் படிக்கும் தனது குழந்தைகளை தினமும் பள்ளியில் இருந்து அழைத்துச் செல்ல வரும் பானுமதி, “குரோம்பேட்டை-மாடம்பாக்கத்துக்கு பதிலாக பொழிச்சலூர்-மாடம்பாக்கம் வழித்தடத்தில் இயக்கினால் நன்றாக இருக்கும். பொழிச்சலூரிலிருந்து நிறைய பேருந்துகள் இல்லாததால் 2 பள்ளி பேருந்துகள் அங்கிருந்து குழந்தைகளை அழைத்து வருகின்றன” என்றார்.

இயக்கப்படும் 50 பேருந்துகளும் ஒரு நாளுக்கு 20 நடை என மொத்தம் 1000க்கும் மேற்பட்ட நடைகள் இயக்கப்படுகின்றன. இந்தப் பேருந்துகளில் ஒரு நாளுக்கு ரூ.6000 முதல் ரூ.7000 வரை வசூலிக்கப்படுவதாக குரோம்பேட்டை ஓட்டுநர் பயிற்சி யாளர் ஒருவர் கூறினார். மேலும் புதிதாக இயக்கப்படவிருக்கும் 50 பேருந்துகள் சென்னையின் எந்தெந்த பகுதிகளில் இயக்கப்பட வேண்டும் என்பதை அரசு கவனத்துடன் முடிவு செய்ய வேண்டும் என பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

SCROLL FOR NEXT