மேற்குத்தொடர்ச்சி மலையடிவார கிராமங்களில் மர்மமான முறையில் கால்நடைகள் கொல்லப்படுவதற்குக் காரணம் ‘நீலகிரி கடுவா’ என்ற விலங்கினம் தான் என வன விலங்கு ஆராய்ச்சியாளர் கூறியுள்ளார்.
கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர் டிஜோ தாமஸ். மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர்களில் வன விலங்குகள் குறித்து ஆராய்ச்சி செய்து வருவதாகக் கூறும் இவர், நேற்று முன்தினம் கோவைக்கு வந்திருந்தார். அப்போது நிருபர்களிடம், மேற்குத்தொடர்ச்சி மலையில் புலி மற்றும் நாய் உருவங்களின் ஒற்றுமையைக் கொண்ட புதுவகையான விலங்கினத்தை ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது: 15 ஆண்டுகளாக மேற்குத்தொடர்ச்சி மலையில் வன உயிரியல் தொடர்பாக ஆராய்ச்சி செய்து வருகிறேன். கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள நெய்யாறு அணைப் பகுதியில் ஆடு, கோழி போன்றவற்றை மர்ம விலங்கு வேட்டையாடியதாக கிடைத்த தகவலையடுத்து, அங்கு ஆய்வு செய்தோம். அந்த விலங்கின் கால் தடம் விநோதமாக இருந்தது. சிறுத்தை, புலி போன்றவற்றின் கால்தடத்தைப் போலவும், அதேசமயம் நகங்களுடனும், அளவில் பெரியதாகவும் இருந்தது. திருச்சூர் மாவட்டம், காஞ்சனி வனப் பகுதியிலும் இதேபோன்ற விலங்கின் கால்தடம் கண்டறியப்பட்டது. அதன் அடிப்படையில் மேற்குத்தொடர்ச்சி மலையில் புதிய வகை மாமிச உண்ணி இருப்பது உறுதி செய்யப்பட்டது. நாயின் முகத் தோற்றத்திலும், புலியைப் போன்ற நிறத்திலும் விலங்கு இருப்பதாகவும், அதை பொதுமக்கள் உறுதிப்படுத்தியும் கூறினர்.
அதன் அடிப்படையில் தொடர்ந்து ஆய்வு செய்ததில், நாயைப் போன்ற முக அமைப்புடன், பழுப்பு, கருப்பு கோடுகள் கொண்ட உடல் வண்ணத்திலும் இருக்கும் விலங்கு ஒன்றை மேற்குத்தொடர்ச்சி மலைத் தொடரில் வசிக்கும் மலைவாழ் மக் கள் நீலகிரி கடுவா, நாய்ப்புலி என்ற பெயர்களில் அழைக்கின்றனர். கோவையின் புறநகர், மலையடிவார கிராமங்களில் கால்நடைகளை மர்ம விலங்கு வேட்டையாடப்படுவதற்கு இந்த விலங்கும் காரணமாக இருக்கலாம். இந்த விலங்கு மாமிச உண்ணியாக இருந்தாலும், மனிதர்களுக்கு தொல்லை தராது. இயல்பாகவே சாதுவான விலங்கு. முன்னங்கால் குட்டையாகவும், பின்னங்கால் உயரமாகவும் இருக்கும். சிறுத்தையின் நகம், காலடித் தடத்தை விட இந்த விலங்கின் நகமும், பாதக்குளம்பும் அளவில் பெரியன என்றார்.
வனத்துறை பதில்
இது குறித்து வனத்துறையினரிடம் கேட்டபோது, ‘புதிய வகை விலங்கினம் எனக் கூறுவதை தனிநபர் ஒருவரின் ஆய்வின் மூலம் ஏற்றுக் கொள்ள முடியாது. அதை அவர் முறையாக உறுதிப்படுத்தினால் மட்டுமே வனத்துறை ஏற்கும். மேலும் கால்நடைகள் இறப்புக்கு நாய்களும் காரணமாக இருக்கின்றன. பல சம்பவங்களில் இது தெரியவந்துள்ளது’ என்றனர்.