சிட்லப்பாக்கம் ஏரி ஆக்கிரமிப்பு களை முழுமையாக அகற்றிவிட்டு, அதுகுறித்து ஜூன் மாதத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண் டும் என அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக சிட்லப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் வைத்தியநாதன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘கடந்த 2015-ம் ஆண்டு சென்னையில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சிட்லப்பாக்கம் ஏரி நிரம்பி அப் பகுதியே வெள்ளக்காடானது. ஒரு வாரத்துக்கும் மேலாக அப்பகுதி யில் தண்ணீர் தேங்கியது. விதி களை மீறி ஏரியில் கட்டப்பட்டுள்ள கட்டுமானங்களே இதற்கு கார ணம். எனவே, விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டுமானங் களை அகற்றவும், புதிய கட்டுமானங்களுக்கு தடை விதிக் கவும் உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தார்.
இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்றம், சிட்லப்பாக்கம் ஏரியில் புதிய கட்டுமானங்கள் மேற்கொள்ள தடை விதித்து உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி (பொறுப்பு) ஹூலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் ஆகியோரைக் கொண்ட அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சிட்லப்பாக்கம் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றிவிட்டு, வரும் ஜூன் மாதத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இப்பகுதியில் புதிய கட்டுமானங்கள் கட்ட விதிக்கப் பட்ட தடை நீடிக்கும் என உத்தர விட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூன் 12-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.