இந்து முன்னணியின் கோவை மாவட்ட செய்தித் தொடர்பாளர் நேற்று முன்தினம் வெட்டிக் கொல் லப்பட்டார். இதனால் கோவையில் பதற்றம் நிலவுகிறது.
கோவை ரத்தினபுரியைச் சேர்ந்தவர் கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தித் தொடர்பாளர் சசிக்குமார்(36). இவரது மனைவி யமுனா. இவர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திரு மணம் நடந்தது. யமுனா, 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு கோவை ராம்நகரில் உள்ள இந்துத்வா நிர்வாகிகள் குழுக் கூட் டத்தில் பங்கேற்றுவிட்டு சசிக்குமார் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
இருசக்கர வாகனங்களில் பின்தொடர்ந்த மர்ம நபர்கள், சசிக்குமாரை அவரது வீட்டிலிருந்து சுமார் அரை கி.மீ தொலைவில் வெட்டியுள்ளனர். ரத்த வெள்ளத் தில் மீட்கப்பட்ட அவர் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். அரசு மருத்துவமனை பிரேதப் பரிசோதனைக் கூடத்துக்கு உடல் அனுப்பிவைக்கப்பட்டது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து கோவையில் பதற்றம் ஏற்பட்டது. நேற்று அதிகாலை முதலே கோவை ரயில் நிலையம், கலைக் கல்லூரி சாலை, டவுன்ஹால், உக்கடம், கெம்பட்டி காலனி, கோவைப்புதூர், மேட்டுப்பாளையம் சாலை, ரத்தின புரி, காந்திபுரம் உட்பட பல பகுதி களில் கடைகள் அடைக்கப்பட்டன. 10-க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்து கள் கல்வீச்சில் சேதமடைந்தன. இதனால், பேருந்துகள் ஓடவில்லை.
சசிக்குமார் உடல் வைக்கப்பட்டி ருந்த கோவை அரசு மருத்துவ மனையில் 5 ஆயிரத்துக்கும் மேற் பட்டோர் திரண்டனர். கோவை மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் தலைமையில் மருத்து வமனையில் பாதுகாப்பு ஏற்பாடு கள் செய்யப்பட்டன. வஜ்ரா வாக னங்கள், தீயணைப்பு வண்டிகள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டன.
இந்து முன்னணி தலைவர்கள் காடேஸ்வரா சுப்பிரமணியம், மூகாம்பிகை மணி ஆகியோர் கூறும் போது, ‘‘சசிக்குமாருக்கு ஏற் கெனவே கொலை மிரட்டல் இருந் ததால், போலீஸ் பாதுகாப்பு கொடுக் கப்பட்டிருந்தது. அதை சமீபத்தில் தான் போலீஸார் விலக்கிக்கொண்ட னர். அதைத் தொடர்ந்தே இந்த கொலை நடந்துள்ளது’’ என்றனர்.
சசிக்குமார் உடலைப் பார்த்து மனைவி யமுனா மற்றும் குடும்பத் தினர் கதறி அழுதனர். சசிக்குமார் உடலை காலை 11 மணிக்கு மருத் துவமனை வளாகத்தில் இருந்து ரயில் நிலையம் வழியாக ஊர்வல மாக செல்ல திட்டமிடப்பட்டது.
அதற்குள், சில கடைகள் அடித்து நொறுக்கப்பட் டன. கோட்டைமேடு பகுதியில் இரு பிரிவினர் திரண்டு நின்றதால் மோதல் ஏற்படும் சூழல் உருவானது. லேசான தடியடி நடத்தி போலீஸார் அவர்களை கலைந்துபோகச் செய் தனர்.
அதையடுத்து, சசிக்குமாரின் உடல் கலைக் கல்லூரி சாலை, உப்பிலிபாளையம் ஜங்ஷன், நஞ்சப்பா ரோடு, காந்திபுரம், கிராஸ் கட் ரோடு, சிவானந்தா காலனி, ரத்தினபுரி, மேட்டுப்பாளையம் சாலை, கவுண்டம்பாளையம் வழி யாக அவரது வீட்டுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
இந்து முன்னணி பிரமுகர் கொலையைத் தொடர்ந்து கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் வெறிச்சோடிக் காணப்பட்டது. | படம்: எம்.பெரியசாமி.
ஊர்வலம் சென்ற வழியில் பல கடைகள் அடித்து நொறுக்கப்பட் டன. போலீஸ் வாகனங்களும் உடைக்கப்பட்டன. ஊர்வலத்தில் சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட் டோர் பங்கேற்றதாக உளவுப் பிரிவு போலீஸார் தெரிவித்தனர். கொலையாளிகளை கண்டு பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப் பட்டுள்ளதாக கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரம்யாபாரதி தெரிவித்தார்.
4 மாவட்டங்களில் கடையடைப்பு
சசிக்குமார் படுகொலையைத் தொடர்ந்து ஈரோடு, திருப்பூர், சேலம், நீலகிரி மாவட்டங்களில் பெரும்பாலான கடைகள் அடைக் கப்பட்டிருந்தன. அரசுப் பேருந்துகள் கல்வீசி தாக்கப்பட்டன. இதனால் பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. தனியார் பேருந்துகளும் ஓட வில்லை. மறியலில் ஈடுபட்டதாக நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
கோட்டை ஈஸ்வரன் கோயில் தெருவில் உள்ள பெரிய பஜாரில் மூடப்பட்டிருந்த கடைகளை அடித்து நொறுக்கும் கலவரக்காரர்கள். | படம்: எஸ்.சிவசரவணன்
75 சதவீத தொழிலாளர்கள் பணிக்குச் செல்லாததால் பின்னலாடை தொழில் பாதிக்கப் பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக் கையாக இந்து முன்னணி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.
தலைவர்கள் கண்டனம்
சசிக்குமார் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பொன்.ராதாகிருஷ்ணன்:
கோவை இந்து முன்னணியின் செய்தி தொடர்பாளர் சசிகுமார் படுகொலை செய்யப்பட்டது கண்டனத்துக்குரியது. சசி குமாரை கொலை செய்த குற்ற வாளிகளை உடனடியாக கண்டு பிடித்து கடும் தண்டனை வழங்க வேண்டும்.
தமிழிசை சவுந்தரராஜன்:
இந்து இயக்க சகோதரரை இழந்ததற்கு கோவையில் எதிர்ப்பை தெரிவித்த பாஜக மாவட்டத் தலைவர் உள்ளிட் டோர், போலீஸ் தடியடியி னால் மண்டை உடைந்து மருத் துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளனர். இது வன்மை யாகக் கண்டிக்கத்தக்கது. மேலும், இதற்கு முந்தைய படுகொலைகளையும் கோவை யில் நிகழ்ந்த படுகொலையும் சிபிஐ விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.
திருநாவுக்கரசர்:
கோவை இந்து முன்னணியைச் சேர்ந்த சசிகுமார் படுகொலை செய்யப் பட்டிருப்பது கண்டனத்துக்குரி யது. இந்த சம்பவத்தில் தொடர் புடைய குற்றவாளிகளை கைது செய்து தண்டனைக்கு உட்படுத்த வேண்டும்.
கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன்:
கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் உள் ளிட் டவை அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. இத் தகைய செயல்களை காவல் துறை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.