இலங்கை கடற்படையினரால் 2015, 2016 ஆண்டுகளில் 803 தமிழக மற்றும் புதுவை மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டனர். இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் ஆழ்கடல் மீன்பிடிப்பை மத்திய, மாநில அரசுகள் ஊக்குவிக்க வேண்டும் என்று மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
எல்லை தாண்டியதாகக் கூறி, கடந்த 2015-ம் ஆண்டில் 71 விசைப்படகுகளை கைப்பற்றிய இலங்கை கடற்படையினர், தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த 466 மீனவர்களை கைது செய்தனர்.
2016-ம் ஆண்டில் 10 நாட்டுப் படகுகள், 4 பைபர் படகுகள், 40 விசைப்படகுகள் என மொத்தம் 54 படகுகளை கைப்பற்றிய இலங்கை கடற்படையினர், 337 மீனவர்களை சிறைபிடித்தனர். கடந்த 2 ஆண்டுகளில் மொத்தம் 803 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டனர். இதில், பாலமுருகன், அரவிந்த் ஆகிய மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
சிறைபிடிப்பு சம்பவம் நடைபெறும் ஒவ்வொரு முறையும், மீனவர்களின் பல்வேறு கட்டப் போராட்டங்களுக்கு பின்னர் மத்திய, மாநில அரசுகளின் முயற்சியால், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்படுகின்றனர். ஆனால், தமிழக மீனவர்களின் 128 படகுகள் விடுவிக்கப்படவில்லை.
கடந்த சில நாட்களில் மேலும் 20 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துள் ளனர்.
இந்நிலையில் 2017-ம் ஆண்டில் புதிய மீன்பிடிக் காலத்தின்போது மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து ராமேசுவரம் மீனவர் பிரதிநிதி அருளானந்தம் கூறியதாவது:
தமிழக விசைப்படகு மீனவர்கள் ஆண்டுக்கு 110 நாட்கள் கடலுக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இதில் மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி வேலை நிறுத்தம், உண்ணாவிரதம் போன்ற தொடர் போராட்டங்களால் ஆண்டுக்கு குறைந்தது 20 நாட்கள் கடலுக்கு செல்ல முடிவதில்லை. தமிழக மீனவர்களை நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் விரட்டி அடிப்பதாலும், புயல் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களாலும் மேலும் சில நாட்கள் வேலையிழப்பு ஏற்படுகிறது. அதிகபட்சமாக ஆண்டுக்கு 50 நாட்கள் மட்டுமே மீன்பிடித் தொழிலில் ஈடுபட முடிகிறது.
இரு நாட்டு மீனவப் பிரதிநிதி கள், அமைச்சர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்துவதை காட்டி லும், இலங்கை கடற்படையினரால் அதிகம் பாதிப்படையக் கூடிய ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், காரைக்கால் பகுதி மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடிப்பு முறைகளை ஊக்கப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பாம்பனைச் சேர்ந்த மீனவர் பிரதிநிதி ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ கூறியதாவது:
ராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூரிலிருந்து மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள ஏதுவாக, அங்கு ரூ.113.90 கோடி செலவில் மீன்பிடித் துறைமுகம் அமைக்க தமிழக அரசு மத்திய அரசிடம் ஒப்புதல் பெற்றுள்ளது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், பாக். ஜலசந்தி கடற்பகுதியில் மீன்பிடிப்பில் ஈடுபடும் விசைப்படகுகளின் நெரிசலை குறைக்க முடியும். இலங்கை கடற்படையினரின் தாக்குதலும் குறைய வாய்ப்புள்ளது.
500 முதல் 1,000 வரையுள்ள நாட்டுப்படகு மற்றும் விசைப்படகுகளுக்கு மாற்றாக ஆழ்கடலில் மீன்பிடிப்பதற்கான நவீன படகை மீனவர்கள் வாங்குவதற்கு மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும். இந்த நடவடிக்கையின் மூலம் இலங்கை இந்தியா இடையே உள்ள கடற்பகுதியை மட்டும் நம்பியிருக்காமல், வங்காள விரிகுடா, அரபிக்கடல், இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் மீன்பிடிக்க முடியும். மேலும், இந்தியாவுக்கு பல கோடி ரூபாய் அந்நிய செலாவணியையும் ஈட்டித்தர முடியும். இந்திய - இலங்கை மீனவர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.