தமிழகம்

ஜல்லிக்கட்டு மீதான தடை நீங்கியதால் தேனி மாவட்ட மாணவர்களிடம் புத்துயிர் பெறும் சிலம்பம்

ஆர்.செளந்தர்

ஜல்லிக்கட்டு மீதான தடை நீங்கியதால் தேனி மாவட்ட பள்ளி மாணவ, மாணவியரிடம் சிலம்பம் பயிற்சி புத்துயிர் பெறத் தொடங்கியுள்ளது.

தேனி மாவட்டத்தில் பல்லவராயன்பட்டி, அல்லிநகரம், கம்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதி கிராமங்களில் சிறுவர் முதல் பெரியவர் வரை சிலம்பம் பயிற்சி பெற்றிருந்தனர். இதன் காரணமாக பொங்கல் பண்டிகை காலங்களில் நடைபெறும் விழாக்களில் தமிழர்களின் வீரவிளையாட்டான சிலம்பம் போட்டி நடைபெற்று வந்தது.

ஆனால் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்கப்பட்டதையடுத்து சிலம்பம் போட்டி நடைபெறவில்லை. ஒருசில இடங்களில் பெயரளவுக்கு சிலம்பாட்டம் நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஜல்லிக்கட்டு மீதான தடை நீங்கியதால் பள்ளி மாணவ, மாணவியர் சிலம்பம் பயில ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் அரண்மனைப்புதுரை சேர்ந்த சிலம்பம் பயிற்சியாளர் எல்.பாண்டி கூறியது: நான் கொத்தனார் வேலை செய்து வருகிறேன். ஆனால் எனது முழு நேர பணியாக கருதுவது சிலம்பம் பயிற்சிதான். கடந்த காலங்களில் சிலம்பாட்டத்தின் மீது இருந்த பற்றின் காரணமாக ஏராளமானோர் சிலம்பம் கற்றனர். ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக சிலம்பம் கற்க யாரும் ஆர்வம் காட்டவில்லை. சில தனியார் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு சிலம்பம் கற்றுக்கொடுக்க ஆசிரியர் கள் என்னை அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் மாணவர்கள் நாங்கள் எதிர் பார்க்கும் அளவுக்கு பயிற்சியில் சேர முன்வரவில்லை. மேலும் பல பள்ளி, கல்லூரிகளின் நிர்வாகம் மாணவர்களை சிலம்பத்தைத் தவிர கிரிக்கெட், கால்பந்து, வாலிபால், டென்னிஸ் போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுத்தி வருகிறது.

இந்தநிலையில் தற்போது ஜல்லிக்கட்டு மீதான தடை நீங்கியதால் மாணவ, மாணவி களிடம் சிலம்பம் புத்துயிர் பெற தொடங்கியுள்ளது. மாண வர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களின் ஆர்வம் காரணமாக பள்ளியில் சிலம்பம் கற்று தரக்கோரி பல்வேறு பள்ளிகளில் இருந்து ஊழியர்கள் என்னை தேடி வருகின்றனர். நானும் பள்ளிகளுக்கு சென்று மிகக்குறைந்த அளவில் கட்டணம் வாங்கிக்கொண்டு சிலம்பம் கற்றுத்தருகிறேன்.

கோடாங்கிபட்டி கிராமத்தை சேர்ந்த ஏழை பள்ளி மாணவ, மாணவியரிடம் கட்டணம் வாங்காமல் இலவசமாக கற்று தந்தேன். அவர்கள் சில நாட்களுக்கு முன்பு நடந்த சிலம்பம் போட்டியில் மண்டல அளவில் முதல் இடத்தையும், மாநில அளவில் 2-வது மற்றும் 3-வது இடத்தை பிடித்துள்ளனர். விருப்பப்படும் கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு சிலம்பம் இலவசமாக கற்று தர தயாராக இருக்கிறேன். ஆர்வம் உள்ளவர்கள் 99652 18386 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

SCROLL FOR NEXT